புத்தெழுச்சிமிக்க திட்டமிடல்கள்… 14 தீர்மானங்களுடன் நடைப்பெற்ற மஜக சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று (10.08.2021) சென்னை மண்ணடியில் உள்ள இந்தியன் பேலஸில் நடைபெற்றது.

அதில் கட்சி வளர்ச்சி, நடப்பு அரசியல், புதிய செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மஜக-வின் தியாகப்பூர்வ முடிவுக்கு மக்கள் அளித்த வரவேற்பும், கட்சிக்கு கிடைத்திருக்கும் செல்வாக்கும் வளர்ச்சி பணிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அனைவரும் கூறினர்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்குழு, செயல் வீரர்கள் கூட்டம் ஆகியன நடத்துவது என்றும், அணிகளின் மாநில செயற்குழு கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஒன்றிய, நகர, கிளை அமைப்புகளை வலிமைப்படுத்துவது குறிததும் ஆலோசிக்கப்பட்டது.

உறுப்பினர் அட்டைகளை வழங்கும் பணிகளும், புதியவர்களை கட்சியில் இணைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

எதிர்வரும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் முழுக்க கட்சிக்கு நன்கொடை சேகரிப்பதில் கவனம் செலுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது

இதில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS.ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர்கள் செய்யது முகம்மது பாரூக், மண்டலம்.ஜெய்னுலாபுதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிறைவாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை…

1, தமிழக அரசின் நிதி நிலவரங்கள் தொடர்பாக நிதியமைச்சர் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கை ஒரு ஆரோக்கியமான முன் மாதிரி என மஜக கருதுகிறது. மேலும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கும் மஜக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

2, 10 ஆண்டுகளை கடந்த ஆயுள்தண்டனை சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும். மேலும் கொரோனா கால சூழ்நிலையை கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக அவர்களுக்கு நீண்ட கால பரோல் வழங்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

3, சென்னை ஐஐடி-யில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் பாரபட்சங்களை தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் விசாரிக்க வேண்டும்.

4, பெகாஸஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு சம்பந்தமாக பிரதமர் மோடி அவர்கள் மௌனத்தை கலைத்து, உண்மை நிலையை விளக்கி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்.

மேலும் இது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்

5, இந்தியாவில் அகதிகளாக வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.

6, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.

7, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா மன்றமும், OIC நாடுகளும் தலையிட்டு அமைதி ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

8, மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை ஒன்றிய அரசு நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்த, வரியை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10, கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்பூசியை செலுத்திட அனைத்து மக்களும் முழு வீச்சில் ஆர்வம் காட்ட வேண்டும்.

11, டோக்கியோ 2021- ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 7 பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கணைகளுக்கு வாழ்த்துக்கள்.

12. வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ஒன்றிய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்

13. மீனவர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கடற்கரை மேலாண்மை சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

14. மாற்றுத்திறனாளியான கன்னியாக்குமரி மாவட்டத்தை சேர்ந்த சமீகா பர்வீன் அவர்கள் விளையாட்டு துறையில் தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்றுள்ள நிலையில், தற்போது போலந்து நாட்டில் நடைபெற உள்ள செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு கண்டனம்

என 14 தீர்மானங்களுடன் கூட்டம் நிறைவுற்றது.

நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, ஈரோடு பாபு ஷாகின்ஷா, புதுமடம் அணிஸ், திருமங்கலம் ஷமீம், நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹிம், அப்சர் சையத், அகமது கபீர், அணி செயலாளர்கள் இளைஞரணி அசாருதீன், IKP லேனா இசாக், மீனவரணி பார்திபன், மாணவர் இந்தியா ஜாவித் ஜாபர், மனித உரிமை அணி பம்மல் சலிம், விவசாய அணி அப்துல் சலாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
10.08.2021