தமிழ்நாடு புதுச்சேரியில் 40 இடங்களில் வெற்றி தளபதி ஸ்டாலின் அவர்களின் வெற்றி மாலையில் 40 முத்துக்கள் ஜொலிக்கின்றன மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை….

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 18-வது மக்களவை தேர்தலின் முடிவுகள் வந்தவண்ணம் உள்ளது.

மோடியிஸத்திற்கும் – ஃபாஸிசத்திற்கும் மாற்றாக ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற புரிதலோடு இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்திருப்பதை புரிய முடிகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வென்றுள்ளது.

தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் எழுச்சிகரமான பரப்புரைக்கு கிடைத்த வெற்றியாக இதனை நாடு பார்க்கிறது.

துல்லியமான தகவல்கள், நிராகரிக்க முடியாத வாதங்கள், ஒயாத பயணங்கள் என அவர் திராவிடப் புயலாய் மாறி; சுழன்றடித்து ஆற்றிய உழைப்புக்கு; தமிழ்நாட்டு மக்கள் உரிய அங்கீகாரத்தை தந்துள்ளனர்.

முன்பு 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கலைஞர் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 இடங்களில் வென்றது.

அதே சாதனையை தளபதியார் அவர்கள் தற்போது கடும் நெருக்கடிகளை கடந்து நிகழ்த்தியிருக்கிறார்.

ஆம். அவர் பெற்றிருக்கும் வெற்றிமாலையில் 40 முத்துக்கள் ஜொலிக்கின்றன.

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தமிழ்நாட்டின் பெரிய பங்களிப்பை அவர் உறுதி செய்திருக்கிறார்.

அவர் தலைமையில் இந்தியா கூட்டணியோடு இணைந்து பணியாற்றியதில் மனிதநேய ஜனநாயக கட்சி பெருமிதம் கொள்கிறது.

இந்தியாவை பாதுகாக்கும் அறப்போரில் அவரது தலைமையில் தமிழர்கள் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள்.

இத்தருணத்தில் திமுக தலைமையில் இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடந்த சித்தாந்த போராட்ட களத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சிகள், தோழமை அமைப்புகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவின் பெருமைமிகு ஜனநாயக மரபுகளை பாதுகாக்க தொடர்ந்து களமாட உறுதியேற்போம்.

முழுமையான வெற்றிச் செய்திக்கு காத்திருப்போம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
04.06.2024.