மதுரை.செப்.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் நான்காவது தலைமை செயற்குழு கூட்டம் மிகுந்த எழுச்சியோடு மதுரையில் நடைபெற்று முடிந்தது.
புதிய பேருந்து நிலையத்தை சுற்றிலும் முக்கிய சாலைகளில் மஜகவின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. தோரணங்களும், வித விதமான பேனர்களும், பல வண்ண சுவரொட்டிகளும் மாநகரம் எங்கும் செயற்குழு வை விளம்பரப் படுத்தி இருந்தன.
காலையிலிருந்தே மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய செயற்குழு உறுப்பினர்கள் அரங்கிற்குள் வந்த வண்ணமிருந்தனர். அனைவருக்கும் தேனீர் மற்றும் காலை சிற்றுண்டிகளை கொடுத்து மதுரை மஜக இளைஞர் அணியினர் உபசரித்த வண்ணமிருந்தனர்.
அதன்பிறகு ஒவ்வொருவரும் தங்கள் வருகையை பதிவு செய்து பேஜ்களை அணிந்துகொண்டு அரங்கிற்குள் நுழைந்தனர்.
இதனிடையே தலைமை நிர்வாகக்குழு கூட்டம் 9:30 மணிக்கு தொடங்கியது. அதன் பிறகு மாநில துணைச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள் பங்கேற்ற சிறப்பு நிர்வாகக்குழு கூட்டமும் நடைபெற்றது.
அதன் பிறகு 11:30 மணிக்கு மாநில செயலாளர் தைமிய்யா அவர்களின் நீதி போதனையோடு தலைமை செயற்குழு தொடங்கியது. துணைப் பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதன்பிறகு செயற்குழுவின் நோக்கத்தை விவரித்து இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி அவர்கள் நோக்க உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நாசிர் உமரி அவர்கள் மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல்களை வழி நடத்தினார். அதில் கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்ப்பு, நிர்வாக கட்டமைப்பு, நிதி ஆதாரம், டிசம்பர் ஆறு போராட்டம் ஆகியன குறித்து செயற்குழு உறுப்பினர்கள் சுமார் ஒரு மணி நேரம் விரிவான விவாதங்களை முன்வைத்தனர்.
அதை தொடர்ந்து நவீன உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின் அடிப்படையில் மஜகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை(app) தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகிக்க பொதுச்செயலாளர் அறிமுகப்படுத்தினார். அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.
அதன் பிறகு மஜகவின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் அதிகாரப்பூர்வமான கொடி பலத்த கரகோஷத்திற்கிடையே அறிமுகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பொதுச்செயலாளர் பதில் அளித்து செயற்குழு தீர்மானங்களையும் விளக்கி கூறினார்.
அதன்பிறகு உணவு மற்றும் தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டது.
அனைவருக்கும் இளையாங்குடி மஜகவின் சார்பில் மஞ்சள் சோறு கறி விருந்து சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டது.
வெளியே பத்திரிக்கையாளர்கள் எண்ணிக்கையை போல உளவுத்துறையினரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
3 மணிக்கு இரண்டாவது அமர்வு கூடியது மஜக வின் வெளிநாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை(MKP) சார்பில் ஐக்கிய அரபு அமீரம், குவைத், கத்தார், புருணை, சவூதி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் அமர்ந்திருந்து இந்நிகழ்வுகளை கவனித்து கொண்டிருந்தனர்.
அதுபோல் முதன்முறையாக கர்நாடக மண்டலத்திலிருந்து பெங்களூர் மாநகர நிர்வாகிகளும் வருகை தந்திருந்தனர்.
இரண்டாவது அமர்வில் பொருளாளர் ஹாரூன் ரஷிது அவர்கள் கட்சியின் வேலை திட்டங்கள் குறித்தும், நன்கொடை சேகரிப்பு குறித்தும் சிறப்பான முறையில் விளக்கி பேசினார். தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசரின் முன் முயற்சியில் நடைபெற்று வரும் நன்கொடை சேகரிப்பு திட்டம் இதுவரை நாகை தெற்கு, திருவாரூர், ஈரோடு கிழக்கு மற்றும் புருனை மண்டலத்தில் வெற்றிகரமாக பயனளித்து இருப்பதை சுட்டிகாட்டியவர், டிசம்பர் மாதம் வரை இத்திட்டம் நீட்டிக்க படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிதியிலிருந்து கட்சிக்கு பத்திரிக்கை தொடங்குவது, தலைமைக்கு இரண்டு கார்களை வாங்குவது ஆகியன படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பதையும் கூறினார்.
எல்லா மாவட்டங்களும் நன்கொடை சேகரிப்பில் தீவிர கவனம் எடுக்க வேண்டும் என்றும் அதில் 25 சதவீதம் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என்பதையும் அறிவித்தார்.
அதன்பிறகு மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், தைமிய்யா, சாதிக் பாஷா, ராசுதீன் ஆகியோரும் அவர்களுடன் மாநில துணைச் செயலாளர்களும், அணிச் செயலாளர்களும் மற்றும் MKPயின் வெளிநாட்டு பிரதிகளும் அடுத்தடுத்து 28 தீர்மானங்களை வாசித்தனர்.
தீர்மானங்களை இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு பாரூக்,கோவை சுல்தான் ஆகியோர் ஒழுங்குப் படுத்தினர்.
நீட் தேர்வுக்கு எதிப்பு மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம், அனிதா உயிர் தியாகத்திற்கு இரங்கல், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவு, காவேரி மேலாண்மை வாரியத்திற்கு வலியுறுத்தல், மீனவர்களின் பிரச்சினைகள், கதிராமங்கலம்_நெடுவாசல் மக்களுக்கு ஆதரவு, சிறைவாசிகள் விடுதலை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் செயற்குழுவின் குரலாக வெளிப்பட்டன.
நடப்பு தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்க தலைமை நிர்வாகக்குழு விற்க்கு இச்செயற்குழு அதிகாரத்தை வழங்கியது.
இறுதியாக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் எழுச்சியுரையாற்றினார். மஜகவின் அபரிதமான வளர்ச்சி குறித்தும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது குறித்தும் நடப்பு அரசியலை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும் பெருத்த ஆரவாரத்திற்கிடையே சிலாகித்து கூறினார்.
மஜகவை தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறியவர், அடுத்த சட்டமன்றத்திலும் இறையருளால் மஜக இடம்பெறும் வகையில் வியூகத்தை வகுப்போம் என்று கூறியவுடன் அரங்கம் அதிர்ந்தது.
நிறைவாக மதுரை மாவட்ட செயலாளர் சேக் அஹமது அப்துல்லா நன்றியுரை கூற, மலரட்டும் மலரட்டும் மனிதநேயம் மலரட்டும் என்ற வீரிய முழக்கத்தை அனைவரும் எழுப்ப செயற்குழு உற்சாகத்தோடு நிறைவுற்று, அனைவரும் புது உத்வேகத்தோடு களம் காண புறப்பட்டனர்.
செயற்குழு முடிந்ததும் அனைவரும் தலைவர்களோடு மாறி, மாறி செல்பி எடுத்துக் கொண்டனர். குழு, குழுவாக மகிழ்ச்சி பொங்க வெவ்வேறு மாவட்டத்தினர் ஒன்று சேர்ந்து களைய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.
வெளியே அமைக்கப்பட்டிருந்த புத்தக கடைகளிலும் அறிவுத்தாகத்தோடு குழுமினர்.
பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்பாக செயற்குழு பணிகளை செய்ததற்காக மதுரை மஜகவினரையும், சிறப்பாக விருந்தோம்பலை செய்ததிருக்காக இளையாங்குடி மஜகவினரையும் அவர்களை ஒருங்கிணைத்து பணி செய்ததற்காக மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைப்புல்லாஹ் அவர்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்.
தகவல்:
#மதுரையிருந்து_மஜக_தலைமை_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
16_09_17