தமிழக அரசுக்கு பாராட்டு! கர்நாடக அரசுக்கு கண்டனம்! மஜக தலைமை நிர்வாக குழுவின் தீர்மானங்கள்!

சென்னை.ஜூலை.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் இன்று 12.07.2021 தலைமையகத்தில் நடைபெற்றது.

இதில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவைத் தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர்கள் செய்யது பாரூக், மண்டலம் ஜைனுல்லாபுதீன், கோவை சுல்தான் அமீர், என்.ஏ.தைமிய்யா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுத்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மண்டல வாரியாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வளர்ச்சி பணிகளை முடுக்கி விடுவது என்றும், எதிர்வரும் ஆகஸ்ட் 5 அன்று சிறப்பு நிர்வாகக் குழுவை கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நிறைவாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

https://m.facebook.com/story.php?story_fbid=3575720782527671&id=700424783390633

1) புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி தலைமையிலான திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்பட்டதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், மாநில உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் திமுக ஆட்சி செயல்பட்டு வருவது அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் அவர்களின் சிறப்புமிகுந்த பணிகள் தொடர்ந்திட இதயப்பூர்வமான பாராட்டுகளை மனிதநேய ஜனநாயக கட்சி தெரிவிக்கிறது.

2) தமிழர்களின் ஒற்றுமையை சீர்கெடுக்கும் நோக்கத்தோடு கொங்கு நாடு என்ற முழக்கம் வலதுசாரி சக்திகளால் சமீபகாலமாக முன்னெடுப்பதை தமிழக மக்கள் கவலையோடு உற்று நோக்குகின்றனர். இது எந்தவிதத்திலும் தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும், தமிழர்களின் ஒற்றுமைக்கும் உகந்ததல்ல என்பதனால் இத்தகைய கருத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சி எதிர்க்கிறது.

3) கொரோனா தடுப்பூசிகளை மாநிலத்துக்கு வழங்குவதில் இந்திய ஒன்றிய அரசு காட்டிவரும் பாரபட்சம் மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தளை ஏற்படுத்தியுள்ளது. இவ்விசயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு மஜக கேட்டுகொள்கிறது.

4) பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மனிதநேய ஜனநாயக கட்சி கடுமையாக கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கை கண்டிக்கும் தருணத்தில் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து தமிழகம் முழுவதும் மஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

5) காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் நீராதாரத்தை பறிக்கும் நடவடிக்கையாக மஜக கருதுகிறது. எனவே, கர்நாடக அரசு அங்கு அனைக் கட்டும் முயற்சியை கைவிடவேண்டும் என்றும், இந்திய ஒன்றிய அரசு அதை தடுக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், கர்நாடக அரசின் இப்போக்கு தொடருமேயானால் மனிதநேய ஜனநாயக கட்சி இதர ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கண்ட 5 தீர்மானங்களுடன் தலைமை நிர்வாகக் குழு நிறைவுற்றது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
12.07.2021