அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது…! மஜக வேண்டுகோள்…!!

image

(மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA வெளியிடும் அறிக்கை)

“நிதி ஆயோக்” பரிந்துரை எனும் பெயரில் மத்திய அரசு எடுத்து வரும் பல முடிவுகள் நாட்டை சீர்குலைக்கும் வகையிலே இருக்கின்றன. இப்போது அங்கன்வாடி மையங்களை குறிவைத்திருகிறார்கள்.

அங்கன்வாடி மையங்களில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களில் உடனுக்குடன் சமைத்து சுவையான, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்திட மத்திய அரசு திட்மிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஒரு நபருக்கு இதற்கு ஆகும் மாதாந்திர தொகையான 180 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது என இதற்கு விளக்கமளித்துள்ளனர்.

மொத்தமாக ஒரு பொருளை தயாரிக்கும்போது ஆகும் செலவும், தனித்தனியாக தயாரிக்கும்போது ஆகும் செலவும் வெவ்வேறு அளவு கோலானது என்ற அடிப்படை அறிவு, நிதி வல்லுனர்களுக்கு தெரியாமல்  போனதா? என்று தெரியவில்லை.

180 ரூபாயில் 1 வாரத்திற்கு கூட ஊட்டச்சத்துக்களை வாங்கிக் கொடுக்க முடியாது. மேலும், இத்தொகையை பெற்றோர்கள் குழந்தைகளுக்குதான் செலவழிப்பார்கள் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை.

ஊட்டத்சத்து குறைவால், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக் கூடாது என்பதும், அது எதிர்கால இந்தியாவை பாதித்து விடக் கூடாது என்பதும் தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தவறான முடிவுகளை எடுத்து, நாட்டின் பொருளாதர வளர்ச்சியை நாசப்படுத்திவிட்டு, இதுபோன்ற அடிப்படை தேவைகளுக்கான திட்டங்களை மூடி, அதன் மூலம் அரசின் கருவூலத்தை சேமிக்க நினைப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது.

எந்த நோக்கத்திற்காக அந்த திட்டம் தொடங்கப்பட்டதோ, அதிலிருந்து திசை மாற மத்திய அரசு துணை போகக்கூடாது.

எனவே, தற்போதைய நிலைப்படி அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு, பழைய முறையில் குழந்தைகள் உட்பட அனைவரும்  ஊட்டச்சத்துடன் பராமரிக்கப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
#M_தமிமுன்_அன்சாரி_MLA,
#பொதுச்_செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
16.10.17.