கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது! தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA, தனியரசு MLA வேண்டுகோள்!

image

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA வெளியிடும் கூட்டறிக்கை)

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 20 மீட்டர் அகலத்திற்கு எரிவாயு குழாய் பதிக்க இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் (கெயில்) மத்திய அரசிடம் அனுமதி பெற்றது.

விவசாய நிலங்களை பாதிக்கும் இத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்கள்.

தமிழக அரசின் சார்பில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு சீராய்வு மனு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு இத்திட்டத்தை பசுமை கொழிக்கும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அமல்படுத்த முனைவது கண்டனத்திற்குரியது.

விவசாய நிலங்களை பாழ்படுத்துவதை அனுமதிக்க முடியது. கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களின் வழியேத்தான் எரிவாயு குழாய்கள் பதிப்போம் என அடம் பிடிப்பதை ஏற்கவே முடியாது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக மட்டுமே இந்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
உ.தனியரசு MLA,
சேது கருணாஸ் MLA,
M.தமிமுன் அன்சாரி MLA.
10.10.2017