எதிர்வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற விருக்கும் அணிவகுப்பில், தமிழக அரசு பரிந்துரைத்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு பொறித்த வாகனங்கள் சில அனுமதிக்கப்பட வில்லை என வரும் செய்திகள் வேதனையளிக்கிறது.
தமிழகத்தின் வீரமங்கையும், மன்னர் ஹைதர் அலியின் உடன் பிறவா சகோதரியுமான வேலுநாச்சியாரும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் போன்ற பல தியாகிகளும் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது.
சர்வதேச தலைவர்களுக்கு இவர்களை தெரியாது என ஒன்றிய அரசு விளக்கம் கூறியிருப்பதாக வரும் செய்திகள் வெட்கக்கேடானது.
இன்றைய சர்வதேச தலைவர்களுக்கு தங்களது தியாகங்கள் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் போராடவில்லை.
தங்கள் காலத்தில் நிலவிய அன்னிய அரசாதிக்கத்திற்கு எதிராக; மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பிரதிபலன் பாராமல் போராடிய தியாகிகள் அவர்கள்.
இது ஒன்றிய அரசுக்கு தெரியாதா? அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா?
டெல்லியில் போராடியவர்களும், ஆங்கிலேயர்களுடன் சுமூக உறவு வைத்துக் கொண்டு நடித்தவர்களும்தான் தியாகிகளா? என்ற கேள்விகள் எழ வாய்ப்பளிக்கக் கூடாது.
சர்ச்சைக்குரிய கோல்வார்க்கரை விட உலக வரலாற்றுக்கு அறிமுகமான எண்ணற்றோர் இந்தியா முழுக்க விதைக்கப்பட்டுள்ளனர்.
இதை ஒன்றிய அரசு புரிந்துக் கொண்டு உண்மையான தியாகிகள் அனைவரையும் சமமாக போற்ற வேண்டும்.
அதுவே பொது ஒற்றுமைக்கு அழகு சேர்க்கும்.
காந்தியும், நேருவும், அபுல் கலாம் ஆசாத்தும், நேதாஜியும் போற்றப்பட வேண்டும்.
அதேநேரத்தில் கேரளாவின் நாராயண குருவும், கர்நாடகத்தின் திப்பு சுல்தானும் போற்றப்பட வேண்டும்.
அந்த வகையில்தான் எமது நிலத்தின் வீரப்புதல்வர்களையும் கொண்டாட வேண்டும் என்கிறோம்.
எமது தாய் தமிழ் மண்ணில் போராடிய வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன், மருதநாயகம் போன்ற விடுதலை போராட்ட தியாகிகளும் மதிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
சர்வதேச தலைவர்களுக்கும், ஊடகங்களுக்கும் எமது தியாகிகளின் வரலாறுகளும் உணர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதை கேட்கும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு.
ஒன்றிய அரசிற்கு வரிப் பணத்தை வாரி வழங்குவதிலும், தேசத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதிலும் தமிழகம் முன் வரிசையில் பலம் காட்டி நிற்கிறது.
எனவே ஒன்றிய அரசு எமது தமிழ் மண்ணின் விடுதலை வேங்கைகளை புறக்கணிப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
இவ்விஷயத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி துணை நிற்கும்.
மேலும் இவ்விஷயத்தில் கட்சி மற்றும் அரசியல் பேதம் பார்க்காமல் தமிழக மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
17.01.2022