பாராளுமன்றத்தில் தமிழை இழிவுபடுத்துவதா? தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கண்டனம்!

image

(தமிழக கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத்தலைவர் உ.தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.சேது கருணாஸ் MLA ஆகியோர் கூட்டாக வெளியிடும் அறிக்கை)

நேற்று நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் மாண்புமிகு தம்பிதுரை அவர்கள் தமிழில் பேசும்போது அதற்கு நாடாளுமன்றத்தில் வட இந்திய எம்.பிக்கள்  எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவர் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டு ஆங்கிலத்தில் பேசியிருக்கிறார்.

இது தமிழை அவமதிக்கும் செயலாகும் அப்பட்டமான மொழிவெறி என்பதிலும் ஐயமில்லை. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக தமிழ் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் பேசலாம் என்று விதி இருக்கிறது. இந்தியில் ஒருவர் பேச உரிமை இருக்கும்போது, தமிழிலும் பேச உரிமை இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த துணை சபாநாயகர் தமிழில் பேசியதை இடையூறு செய்து தடுத்து நிறுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான இது போன்ற செயல்கள் நாடாளுமன்றத்திலேயே அரங்கேறுவது கடும் வேதனையளிக்கிறது.

தமிழர்களை நோகடிக்கும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் அளித்து , இதுபோன்ற நிகழ்வுகள் இனிநடக்காத வண்ணம் உறுதியளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

1. உ.தனியரசு MLA

2. M. தமிமுன் அன்சாரி MLA

3. M. சேது கருணாஸ் MLA