(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை)
தெற்கு ரயில்வே துறை, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 25 விரைவு ரயில்களுக்கு இருந்து வரும் பிரிமியம் தட்கல் முன்பதிவு முறையை மேலும் 100 விரைவு ரயில்களுக்கு விரிவுபடுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை முன் அறிவிப்பு இல்லாமல் அமல்படுத்தி இருப்பது தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தட்கலுக்கு ஒதுக்கப்பட்ட 30 விழுக்காடு இருக்கையில் இருந்து பிரிமியமுக்கு 15 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. படிப்படியாக ஏற்கெனவே 25 ரயில்களுக்கு பிரிமியம் விரிவு படுத்தப்பட்டிருந்தது. இந்த தட்கல் சிஸ்டம் முறையில் சொற்ப வசதி படைத்தவர்கள் பயனடைந்து வந்தனர். அதில் 15 விழுக்காடு இருக்கைகள் இப்போது அவர்களுக்கும் எட்டாக் கனியாகி விட்டது. தட்கல் முறையில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பிரிமியம் தட்கலில் சாதா வகுப்பு கட்டணத்தை காட்டிலும் 3 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தட்கலில் போகும் வசதி கொண்டவர்களில் பாதி பேர் பயண வாய்ப்பை இழக்கின்றனர்.
ரயில்வே துறையானது மக்களின் தேவைக்கேற்ப தடங்களின் எண்ணிக்கையையும் ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். அதை விடுத்து இருக்கும் ரயில்களில் உள்ள பெட்டிகளில் சிலதை எடுத்து தட்கல், பிரிமியம் என்று பிரித்து கொண்டு கட்டணத்தை மேலும் மேலும் அதிகரித்து செல்வது மக்கள் நல அரசுக்கான அடையாளம் இல்லை.
கடந்த காலங்களில் சாமானிய மக்களின் பயணத் தேவைக்காக விடப்பட்ட ரயில் பெட்டிகளின் இருக்கைகளை வசதிபடைத்தவர்களிடத்தில் பன்மடங்கு கட்டணத்துக்கு விற்பது நிச்சயம் ஒரு மோசடி செயலே ஆகும்.
எனவே, மத்திய அரசு பிரிமியம் என்ற நூதன முன்பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி கேட்டுக்கொள்கிறது.
இவண்;
எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது
மாநில பொருளாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
06.06.2017