M.C.ராஜ் மரணம்! தேர்தல் சீர்திருத்தத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு!

image

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA இரங்கல்)

இந்தியாவில் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்ற முழக்கத்தோடு ஒற்றை ஆளுமையாய் நாடு முழுக்க வலம் வந்தவர் தோழர் M.C.ராஜ் அவர்கள்.

இதற்காக ‘CERI’ என்ற அமைப்பை தோற்றுவித்து ஜெர்மனி உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளது போன்ற ‘விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறை’ இந்தியாவுக்கு தேவை என்பதை பரப்புரையாக்கினார்.

இக்கோரிக்கையை கடந்த 25 ஆண்டுகளில் இவர் அளவுக்கு இதுவரை யாரும் முன்னெடுத்து செயல்படவில்லை.

நாடு முழுக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் சேவை இயக்க களங்களின் இது குறித்து கருத்தரங்குகளை நடத்தி அறிவுஜீவிகளை அணி திரட்டினார்.

CERI அமைப்பில் தமிழகம் சார்பில் நானும், விசிக-வின் துணைப் பொதுச்செயலாளர் தோழர்.சிந்தனை செல்வனும் இடம் பெற்று நாடு முழுக்க பயணித்தோம். தலைநகர் டெல்லியில் பல கருத்தரங்களில் பேசிடும் வாய்ப்பை M.C.ராஜ் அவர்கள் எங்களுக்கு வழங்கினார்கள்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்களின் போது, கடும் குளிரில் நாங்கள் தேசிய கட்சிகளின் தலைவர்கள் வீடுகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் சென்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து விளக்கமளித்தோம். அந்த மாபெரும் சேவையில் M.C.ராஜ் அவர்கள் எங்களை வழி நடத்தினார்.

இதன் மூலம் நாடறிந்த தலைவர்களோடு உரையாடும் வாய்ப்பும் , அறிமுகமும் , நட்பும் கிடைத்தது . CERI அமைப்பு நாடு முழுக்க பிரதிநிதிகளை பெற்றது . இதனால் மணிப்பூர் , ஒரிஸா , வங்கம் , உ.பி , டெல்லி , தமிழ்நாடு , மஹாராஷ்டிரா , ஜார்க்கண்ட் , உத்தராஞ்சல் , பீஹார் என எங்களின் நட்பு வட்டாரமும் விரிவடைந்தது . தேர்தல் சீர்திருத்த பரப்புரையும் வலுவடைந்தது .

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள ‘பூஷ்சக்தி கேந்திரா’ வில் தான் CERI தலைமையகம் செயல்பட்டது . அது ராஜ் அவர்களின் பண்ணை வீடு . அங்கே தமிழகம் சார்பில் நானும் , அண்ணன் O.U. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் தோழர் . சிந்தனை செல்வன் அவர்களும் சென்று தங்கியுள்ளோம் . அங்கே தேர்தல் சீர்திருத்த பரப்புரை குறித்து நடைபெற்ற திட்டமிடல்கள் பங்கேற்றுள்ளோம் . தோழர் M.C ராஜ் அவர்கள் சிறப்பாக எங்களுக்கு வகுப்பெடுப்பார் .

அவர் ஒரு தமிழன் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியது . அவரது மனைவியார்  ஜோதியம்மாள் அவர்களும் இப்பணியில் முனைப்போடு ஈடுபட்டார் .

அறிவு தனத்தை கடந்து , வெகு மக்கள் களத்துக்கு தேர்தல் சீர்த்திருத்தத்தை கொண்டு செல்ல நாங்கள் திட்டமிட்டிருந்தோம் .

இந்நிலையில் தான் கடந்த 1 வருடமாக தோழர் M.C.ராஜ் அவர்கள் புற்றுநோயால் வீழ்ந்தார் . நான் அவரை அலைப்பேசி வழியாக நலம் விசாரித்தேன் . தற்போது நலமாக இருப்பதாக கூறினார் .

இன்று தனது பணிகளிலிருந்து விடைபெற்றிருக்கிறார் . தேர்தல் சீர்திருத்தம் குறித்து பல பெரிய அரசியல் கட்சி தலைவர்களோடும் , முன்னாள் , இன்னாள் தேர்தல் ஆணையர்களோடும் , ஆழமாக உரையாடி வந்த அவரது மறைவு இந்திய தேர்தல் சீர்த்திருத்த முயற்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது .

அவரை இழந்து வாடும் CERI தோழர்களுக்கும் , ஜோதி அம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எமது இரங்கலையும் ,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் .

இவண்,

M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
06/06/2017