(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)
தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்ட தொகையை பெறுவதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
நாகை மாவட்டத்தில் வெண்ணாறு வடிநில கோட்டப் பகுதிகளில், நிலத்தடி நீர் இல்லாததால் பயிரிடப்பட்ட பயிர்கள் முழுமையாக காய்ந்து போய் இருக்கின்றன. இது போன்ற பகுதிகளில் “விளைச்சலில் இழப்பு” என்பதன் அடிப்படையில், காப்பீடு என்பது அநேக பகுதிகளில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது.
இதனால் விவசாயிகளுக்கு கிராமங்கள் வாரியாக காப்பீட்டு தொகை வழங்குவதில் பாகுபாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, வருவாய் தீர்ப்பாய சட்டத்தின் அடிப்படையில் 51 சதவீதத்திற்கும் மேல் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முழு பாதிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்,
அதன் அடிப்படையில், 100 சதவீத இழப்பீட்டுத் தொகையை வழங்க தமிழக அரசு இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் பேச வேண்டும். இது குறித்து சிறப்பு காப்பீட்டிற்கான மாவட்ட அளவிளான கூட்டதை (DLMC) கூட்டி உடனடியாக பாகுபாடு இன்றி காப்பீடு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.
இப்பிரச்சனை காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இருப்பதால், தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர்களை இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்திட அறிவுறுத்த வேண்டும்.
மேலும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்தை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இன்சூரன்ஸ் நிறுவனம் அதற்கு ஒத்துக் கொள்ளாவிட்டால், தமிழக அரசு அதை ஈடுகட்டி விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
05.10.17.