முரசொலிக்கு மஜக சார்பில் பவளவிழா வாழ்த்து !

image

(முரசொலி பவளவிழாவில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , தனியரசு MLA , கருணாஸ் MLA ஆகியோருக்கு திமுக செயல் தலைவர் மாண்புமிகு அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். மற்ற இருவரும் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்கள். மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துசெய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…,)

தமிழ் சமுதாயத்தில் கடந்த 75 ஆண்டுகாலமாக மாபெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகமாக முரசொலி திகழ்ந்து வருகிறது. கலைஞரின் முயற்சியில் உருவாகி , அவரால் 75 ஆண்டுகளாக இப்பத்திரிக்கை வழிநடத்தப்பட்டிருக்கிறது என்பது பெரும் ஆச்சர்யத்தை தருகிறது.

ஒரு ஊடகத்தை உருவாக்கியவரின் தலைமையிலேயே , அது 75 ஆண்டுகள் இயங்கி வருவதும் , அந்த நிறுவனமும் , உருவாக்கியவரும் 75 ஆண்டுகள் ஒன்றாய் பயணிப்பதும் ஒரு அரிய வரலாற்று நிகழ்வாகும் . எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திய கலைஞரின் சாதனைகளில் அதுவும் ஒன்றாகும்.

முரசொலி , அரசியல் தாக்கத்தை கடந்து , சமுதாய விழிப்புணர்வு பணிகளிலும் சமரசமின்றி அறிவொளியை பாய்ச்சிய பத்திரிக்கை என்பது அதன் கூடுதல் சிறப்பாகும்.

ஐயா பெரியார் , பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் , எத்தனையோ நெருக்கடிகளை கடந்து முரசொலி பயணித்திருக்கிறது . திராவிட இயக்கத்தை உயிரோட்டமாய் வைத்துக் கொள்ளும் அரும் பெரும் பணிகளையும் செய்திருக்கிறது .

பெர்னாட்ஷா, இங்கர்சால் , காரல் மார்க்ஸ் , கன்பூசியஸ் என பன்னாட்டு அறிவர்களின் கருத்துகளையும் முரசொலி வெளியிட்டு தமிழ் சமுதாயத்தில் விழிப்புணர்வு பணியை செவ்வனே செய்து வந்திருக்கிறது. அதனால் தான் கலைஞர் அவர்கள் ‘ முரசொலி ’ யை தனது மூத்தப்பிள்ளை என்று கொண்டாடினார்.

‘உடன் பிறப்பே …’ எனத் தொடங்கும் கலைஞரின் கடிதத்தில் தமிழ் தங்க வார்த்தைகளாய் கொட்டிக் கிடக்கும். அது திமுக தோழர்களையும் தாண்டி அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும் .

அனுபவங்கள் , அறிவுரைகள் , கண்டிப்புகள் , சிங்கார வார்த்தைகள் , உவமைகள் , எச்சரிக்கைகள் , புள்ளி விபரங்கள் என அனைத்தையும் தாங்கி வரும் அவரது கடிதங்களை முழுமையாக படிப்பதற்காகவே பலரும் கட்சி வேறுபாடுகளை கடந்து முரசொலியை வாங்குவார்கள் . படித்து ரசிப்பார்கள்.  அதில் நானும் ஒருவன்.

தான் எண்ணிய கருத்துகளை கலைஞர் அவர்கள் வெவ்வேறு வடிவங்களில் , சிலேடை மொழிகளில் வெளியிடுவார். அதை அவரது அரசியல் எதிரிகளும் ரசிப்பார்கள்.

கலைஞரின் கவிதைகள் , கட்டுரைகள் , காவியங்கள் , திரை வசனங்கள் என 75 ஆண்டு காலமாய் முரசொலி தமிழ்மணம் பரப்பியிருக்கிறது . இது தவிர பலருக்கு அன்றாடம் தமிழ் கற்றுதரும் ஆசிரியராகவும் முரசொலி கடமையாற்றியிருக்கிறது.

கலைஞரின் எண்ண ஒட்டங்களை எழுத்துகளாய் தாங்கி வந்த முரசொலி , தனது பவளவிழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது தமிழ் ஊடக உலகம் போற்ற வேண்டிய நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

இந்நிகழ்வில் நானும் பங்கேற்று வாழ்த்தவேண்டுமென தாங்கள் அழைப்பு விடுத்தமைக்கு இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்து , தொடர்ந்து அரசியல் , சமுதாய விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் முரசொலிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எங்களது நெஞ்சார்ந்த 75 ஆவது பவளவிழா வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் கூறி , தங்கள் வழிகாட்டலில் அது நூற்றாண்டு விழாக் காணவும் வாழ்த்துகிறோம் .

அன்புடன்

M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
03.08.2017