#காவிரிப்பகுதியை_வேளாண்_மண்டலமாக_அறிவிக்க_வேண்டும் !
#சிறுபான்மை_கல்லூரிகளின்_சிக்கல்களை_இலகுவாக்க_வேண்டும் !
#நல்ல_திரைப்படங்களை_அடையாளம்_கண்டு_அரசு_ஊக்குவிக்க_வேண்டும்!
#ரோஹிங்கியா_மக்களை_பாதுகாக்க_வேண்டும்!
சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் வேண்டுகோள் !
(கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசிய உரையின் நிறைவு பகுதி)
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே …
#காவிரிப்பகுதியை பாதுகாக்க வேண்டும்
நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை சமவெளிப் பகுதி பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே, காவேரி ஆறும் அதனுடைய கிளை நதிகளும் பாயக்கூடிய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் வடக்குப்பகுதி, கடலூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி ஆகியவைகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்து, அங்கு விவசாயத்திற்கு எதிராக எந்தத் திட்டங்களையும் அமல்படுத்தாமல் விவசாயத்தைப்பாதுகாக்க மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு அறிவிப்பு செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதுபோன்று, தட்கல் முறையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விவசாய மின்னிணைப்புகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு போதுமானதாக இல்லை. தஞ்சை உள்ளிட்ட டெல்டா விவசாயிகளின் நலன்கருதி, மேலும் 3000 மின்னிணைப்புகளை காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும். அதில் 1500 இணைப்புகளை தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
#கல்வி நிலையங்களின் கோரிக்கைகள்
சிறுபான்மைக் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை நான் இங்கே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். அரசியல் சாசன சட்டம் 30 (1)-ன் அடிப்படையில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம்,1976 முடிவு செய்துள்ளது. ஆனால், கல்லூரி கல்வி இயக்குநர்கள் மற்றும் மண்டலக் கல்வி இணை இயக்குநர்கள் அதனை பின்பற்றுவது இல்லை. கல்லூரி செயலாளர், நிர்வாகத்தால் மாற்றப்பட்டால், ஒழுங்காற்றுச் சட்டம் படிவம் 6 சமர்பிக்கப்பட வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறார்கள், மூன்றாண்டுகளாக செயலாளர்களாகப் பணியாற்றுகிறவர்களுக்கு இது அவசியம் இல்லை.
எனவே , இது போன்ற விஷயத்திலே சென்னை உயர் நீதிமன்றமும் , சட்டமும் என்ன சொல்லியிருக்கிறதோ, அதைச் செயல்படுத்த வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் தொடங்கும்போது, சிறுபான்மைக் கல்லூரிச் சான்றிதழ்களை அரசு அளிக்கும். ஆனால், 2007-முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதனைப் புதுப்பிக்க வேண்டுமென வற்புறுத்துகிறார்கள். இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விஷயத்திலும் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு கனிவோடு செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் .
#நல்ல சினிமாக்களை ஊக்குவிக்க வேண்டும்
சினிமாவைப் பற்றி எனக்கு பல மாறுபட்ட கருத்துகள், அபிப்பிராயங்கள் உண்டு, ஏனென்று சொன்னால், மக்களுடைய வாழ்வியலை சினிமா பேச வேண்டும். அதனால் தான் ஈரான் நாட்டு திரைப்படங்கள் உலகம் முழுக்க போற்றப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன.
ஈரானிய திரைப்படங்களைப் போன்று நம்முடைய நாட்டிலும் திரைப்படங்கள் வாழ்வியலைப் பேசக்கூடிய வகையிலே வரவேண்டும். உதாரணத்திற்கு Children Of The Heaven என்று ஒரு திரைப்படம். உலகம் முழுக்கப் பாராட்டுகளை பெற்றது.
நம்முடைய தமிழ் மண்ணிலும் பல புதிய இயக்குநர்கள் அதுபோன்ற புதிய முயற்சியோடு வந்திருக்கிறார்கள். இது குறித்து, திரைப்படத்துறையோடு தொடர்பிலிருக்கும் பல நண்பர்கள் என்னிடம் ஒரு தகவலை தந்திருக்கிறார்கள். அதனை நீங்கள் இந்த அவையில் பதிவு செய்யுங்கள் என்றுச் சொன்னார்கள். ஆகவே நான் அதனைப் பதிவு செய்கிறேன்.
என்னவென்று சொன்னால் ‘வழக்கு எண் 18/2009’ என்ற படத்தை எடுத்த இயக்குநர் சக்திவேல் பாலாஜி, ‘நீர்ப்பறவை’ படம் எடுத்த இயக்குநர் சீனு ராமசாமி, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் எடுத்த இயக்குநர் தங்கர்பச்சான், ‘ஈ’ படம் எடுத்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், ‘சாட்டை’ படம் எடுத்த இயக்குநர் அன்பழகன், ‘சலீம்’ படம் எடுத்த இயக்குநர் பிரேம்குமார், ‘அப்பா’ படம் எடுத்த சமுத்திரகனி, ’36 வயதினிலே’ படம் எடுத்த இயக்குநர் இராசன் போன்ற இயக்குநர்களை தமிழக அரசு உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் இயக்குநர் ராஜூ முருகன் எடுத்த ‘ஜோக்கர்’ படத்திற்கும், இயக்குநர் கே.வி. ஆனந்த எடுத்த ‘கவண்’ படத்திற்கும் தமிழக அரசு சிறப்பு விருது வழங்கிட வேண்டுமென்று இந்த மாமன்றத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.
#ரோஹிங்கிய மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வேண்டும்
ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டது போலவே, பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்து அகதிகளாக 90 முதல் 100 பேர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் அகதி அந்தஸ்து கொடுத்து, நம்முடைய மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சட்டப்பேரவையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார்.
தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
தலைமை செயலக வளாகம்
சென்னை.