வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது! மஜக அறிக்கை!

image

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை)

வந்தே மாதரம் பாடலை கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

“தாய்மண்ணை வணங்குவோம்” என்றும் “துர்காதேவியை  வணங்குவோம்” என்றும் பொருள்படும் வார்த்தைகளை கொண்ட, அப்பாடல் முஸ்லிம்கள் பின்பற்றும் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்ற “ஓரிறை கொள்கை வழிபாட்டு”  முறைக்கு எதிரானதாகும்.

மேலும், கடவுள் மற்றும் மத மறுப்பு கொள்கை கொண்டவர்களுக்கும் இப்பாடல் எதிராக உள்ளது.

இப்பாடலை சுதந்திரப் போராட்ட களத்தில், Rss ஆதரவாளர்கள் முன்னெடுத்தப் போது, அதை முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள். அதை காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், நேரு உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் இப்பாடலை இயற்றினார். இவர் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராக அக்காலத்தில் பல நூல்களை இயற்றியவர்.

எனவே தான் தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், போற்றும் வகையில் ரவிந்திரநாத் தாகூர் இயற்றிய “ஜன கன மண கன…” பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்கள்.

இன்று அனைவரும் அதை மனமுவந்து போற்றிப் பாடுகிறோம்.  அது போல ராணுவத்தில் பாடப்படும் “சாரே ஜகான் சே அச்சா” என்ற ” உலகத்திலேயே சிறந்த நாடு  நம் இந்திய திருநாடு” என்று பாடலையும் பாடுகிறோம்.

இந்நிலையில் “வந்தே மாதரம்” குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவு எந்த வகையிலும் ஏற்க முடியாது.

அந்த தீர்ப்பில் இப்பாடலை பாடுவது கட்டாயமில்லை என்று கூறப்பட்டாலும் அது தேவையற்ற குழப்பத்தையும் பிளவையும் தான் ஏற்படுத்தும்.

பள்ளிக்கூடத்தில் ஒரே நேரத்தில் ஒரு தரப்பினர் இப்பாடலை பாடும் போது, மற்றொறு தரப்பினர் பாடுவதை புறக்கணிக்கும் போது தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்.

பன்மை கலாச்சாரம் கொண்ட இந்திய திருநாட்டில் ஒற்றை கலாச்சாரத்தை புகுத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

இத்தீர்ப்பு அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
25.07.17