ஏழை தாயின் சாபம் சும்மா விடாது…!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

வட இந்தியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

பாமர வட இந்திய இந்து சகோதரர்களை தீவிர இந்துத்துவ வெறியர்களாக்கும் முயற்சியில் காவி மதவெறியர்கள் வெற்றி பெற்று வருகிறார்களோ என அஞ்ச வேண்டியுள்ளது.

கடந்த 1 வாரமாகவே மனசு சரியில்லை. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜுனைத் என்ற பதினாறு வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை கண்ணீரை சிந்த வைத்து விட்டது.

அவன் இளம் வயதில் தந்தையை இழந்து, கூலி வேலை செய்யும் விதவை தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன்.

நோன்பு வைத்துக் கொண்டு, பெருநாளைக்கு புத்தாடை வாங்க, தன் ஏழைத்தாய் சேகரித்த பணத்திலிருந்து 1500 ரூபாயை வாங்கிக் கொண்டு ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டான்.

தன் அருமை புதல்வன் தனக்கும் சேர்த்து புத்தாடை வாங்கி வருவான், நோன்பை துறப்பதற்கு வீட்டிற்கு வந்து விடுவான் என காத்திருந்த அந்த ஏழை விதவைத் தாய் ஏமாந்து போனாள்.

அந்தோ…பரிதாபம்! அந்த நோன்பாளியை, ரயிலில் வந்த ‘பசு காவலர்கள்’ என்ற போர்வையில் திரியும் மதவெறிக் கும்பல், காரணங்களே இன்றி ஜுனைத்தை ‘மாட்டுக்கறிக்கு ஆதரவாளன்’ என்று கூறி சரமாரியாக, துரத்தி, துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறது.

உதவி செய்ய யாரும் வரவில்லை! தடுக்க யாருமில்லை! எல்லோரும் வேடிக்கைப் பார்த்திருக்கிறார்கள். அதுதான் கொடுமை!

அவர்கள் வரலாற்றில் நந்தனை எரித்தார்கள் . சம்புகனை கொன்றார்கள்.

சமீப வருடங்களுக்கு முன்பு பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸையும் , அவரது இரு பிள்ளைகளையும் உயிரோடு எரித்தார்கள் .

நிகழ்காலத்தில் அஹ்லாக்கையும், ரோஹித் வெமுலாவையும் வெவ்வேறு வடிவங்களில் கொன்றார்கள், இப்போது ஜுனைத் …! அவ்வளவு தான்.

ஒரு இளம் பூ மலர்வதற்கு முன்பே மடிந்திருக்கிறது. வாழ்வில் சிறகடித்து பறப்பதற்கு முன்பே ஒரு வண்ணத்துப்பூச்சி குதறப்பட்டிருக்கிறது.

அந்த ஏழைத் தாயின் எதிர்கால கனவுகள் பொசுக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் படுகொலை மனசாட்சி உள்ளவர்களை உலுக்கிருக்கிறது. மனிதநேய கொண்டோர்களை கலங்க வைத்திருக்கிறது.

ஜுனைதை இழந்து துடிக்கும் அவரது தாயை , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழி . பிருந்தா காரட் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் . அந்த தாயின் கதறலை பார்த்தவர்கள் , அழுது துடித்தார்கள் .

ஆனால் பல முன்னணி ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டன. பகிரங்க விவாதங்களை நடத்தவில்லை . பரபரப்பு செய்திகளை உருவாக்கி , அந்த செய்தியை மறக்கடித்தார்கள். இதுதான் ஊடகத் தர்மமோ?

அந்த தாயின் கதறல் தேசம் முழுக்க சமூக இணைய தளங்களின் வழியாக எதிரொலிக்கிறது. அந்த  தாயின் சாபம் அக்கிரமகாரர்களை சும்மா விடாது .

சமூகநீதி பேசும் ஜனநாயக சக்திகள் துடித்து எழ வேண்டிய நேரம் இது.

சர்வாதிகாரிகளும் , பாஸிஸ்டுகளும் , பயங்கரவாதிகளும் , மதவெறியர்களும் , இனவெறியர்களும் , சாதி வெறியர்களும் ஒரு காலத்திலும் வென்றதில்லை .

அந்த ஏழைத் தாயின் கண்ணீரை சுமந்து கொண்டு , எங்கள் இந்து சகோதரர்களிடம் நியாயம் கேட்போம் .! அவர்களில் 90% பேர் நீதியின் பக்கமே இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கண்ணீருடன் …

M.தமிமுன் அன்சாரி MLA
28.06.2017