(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)
வரலாற்று இந்தியாவின் மதச்சார்பின்மையை கட்டிக்காக்கும் சமூக மையங்களாக ஆதின மடங்களும் , தர்ஹாக்களும் திகழ்கின்றன .
ஆதின மடங்களுக்கு மன்னர் ஔரங்கசீப் ஏராளமான இடங்களை தானமாக வழங்கியது குறித்து திரு. மதுரை ஆதினம் பல கூட்டங்களில் பெருமை பொங்க பேசியுள்ளார் .
தீரன் சின்னமலையின் நட்பு காரணமாக கொங்கு மண்டலத்தில் பல கோயில்களுக்கு திப்பு சுல்தான் தானம் வழங்கியதை அண்ணன் தனியரசு MLA அவர்கள் என்னிடம் கூறினார் .
நாகூர் தர்ஹாவின் உருவாக்கத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களுக்கும், நாயக்கர் மன்னர்களுக்கும் பெரும் பங்கு இருப்பதை ஆவணங்களும், நிகழ்கால நடைமுறைகளும் சாட்சி கூறுகின்றன .
இப்படி நிறைய கூறலாம். தமிழகத்தில் முஸ்லிம்களில் ஒரு சாரார் கொண்டாடும் நாகூர் தர்ஹா, முத்துப்பேட்டை போன்ற தர்ஹாக்களில் இந்துக்கள் வருகை தருவது தொடர்ச்சியாக நடக்கிறது. நமது மண்ணின் கலாச்சார ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.
தர்ஹா வழிபாட்டை எதிர்க்கும் முஸ்லிம்கள் கூட அங்கு நிலவும் சமூக இணக்கத்தை விமர்சிப்பதில்லை .
இது போலத்தான் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளும் , பல மதத்தவர்களும் ஒன்று கூடி அன்பு பாராட்டும் வைபவங்களாக நடந்து வருகின்றன.
அதுபோலவே தீபாவளிக்கும் , கிருஸ்துமசுக்கும் தங்களோடு தோழமைக் கொண்டுள்ள பிற சமுதாய மக்களுக்கு முஸ்லிம்கள் பரிசுப் பொருள்களை வழங்கி மகிழ்கிறார்கள்.
தற்போது இந்த தோழமையை நாசம் செய்யும் வேலையை காவி மதவெறி சக்திகள் முன்னெடுத்து வருகிறார்கள்.
அதை முறியடிக்கும் பணியை தற்போது இந்துமத ஆன்மீக தலைவர்கள் தொடங்கியிருப்பது நம்பிக்கையளிக்கிறது.
கர்நாடகாவில் உடுப்பி மடத்தில் பெஜாவர் மடாதிபதி உயர்திரு. விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமிகளின் தலைமையில் முஸ்லிம்களுக்கு இஃப்தார் விருந்து கொடுத்துள்ளனர். கோயிலுக்கு வெளியே உள்ள வளாகத்தில் தான் , சைவ உணவுகளுடன் இந்த விருந்து நடந்துள்ளது .
கோயில் நிர்வாகமே, வளாகத்தின் ஒரு பகுதியில் இஃப்தாருக்கு பிந்தைய மஹ்ஃரிப் தொழுகையை நடத்தவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது .
முஸ்லிம்களுக்கு நம்பிக்கையையும் , பாதுகாப்பு உணர்வையும் ஊட்டும் வகையில் உடுப்பி மடம் எடுத்த இம்முடிவுக்கு நாடெங்கிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அதில் பேசிய உயர்திரு. விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமிகள் ” இந்துக்களும் , முஸ்லிம்களும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்றும் , இந்து மதத்தில் இருப்பவர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறார்கள் என்றும் , இதை மட்டுமே வைத்து முஸ்லிம்களை ஒதுக்கி விடமுடியாது என்றும் , காலம் காலமாக நிலவிவரும் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை கெடுக்க நினைப்பவர்களை ஆண்டவனும் , மக்களும் பார்த்துக் கொள்வார்கள் என்றும் நிதானமாக பேசியுள்ளார் .
அந்த நல்லிணக்க இஃப்தார் படங்கள் நாடெங்கிலும் சமூக இணைய தளங்களில் கொண்டாடப்படுகிறது.
ஆனால் ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் , இந்நிகழ்வை கண்டித்திருப்பதுடன் , நடக்காத பல விஷயங்களை அவதூறாக கூறி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
உயர்திரு. விஸ்வேஸ்வ தீர்த்த சுவாமிகள் போன்ற இந்துமத ஆன்மீக தலைவர்கள் இருக்கும் வரை நமது நாட்டின் ஒற்றுமை நிலைத்திருக்கும்.
நமது அன்பிற்கினிய இந்து சமுதாய சொந்தங்கள், பிரமோத் முத்தாலிக் போன்ற தீய சக்திகளை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.
IS பயங்கரவாதிகளை முஸ்லிம்கள் எப்படி வெறுக்கிறார்களோ , அதேப் போலத்தான் இந்து சமுதாய மக்களும் தங்கள் பெயரால் நடத்தப்படும் மதவெறி கொடுமைகளை வெறுக்கிறார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை !
இவண் ;
M.தமிமுன் அன்சாரி MLA
29.06.2017