தஞ்சையில் மஜக டெல்டா மண்டல செயற்குழு… கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு!

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் நேற்று தஞ்சாவூரில் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மொலா.நாசர், துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தார் ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மாநில துணைச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், புதுக்கோட்டை துரை முஹம்மது, நெய்வேலி இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் முகம்மது மஹ்ரூப், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர்பாட்சா, விவசாய அணி மாநில துணைச் செயலாளர் ஷேக் இஸ்மாயில் ஆகியோரும் பங்கேற்றனர்.

நாகை, திருவாருர், தஞ்சை வடக்கு, தஞ்சை மாநகர், தஞ்சை தெற்கு, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை (கிழக்கு), புதுக்கோட்டை (மேற்கு), பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

இதையொட்டி தஞ்சை மாநகரில் முக்கிய ரவுண்டானக்கள் மற்றும் சாலைகளில் மஜக கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

காலை 9.30 முதலே மண்டபம் நிரம்ப தொடங்கியது.

மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜ்தீன் அவர்களும், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் வருகை பதிவை சரியான முகவரிகளை சரி பார்த்து ஒழுங்கு செய்தனர்.

அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டு, ஜூரம் அறியும் கருவி மூலம் அனைவரும் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் வரவேற்பு ஆற்றினார்.

தொடர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட மஜக முன்னாள் மாநில துணைச் செயலாளர் வசீம் அக்ரம் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்க, அனைவரும் ஒரு நிமிடம் சோகம் கவிழ எழுந்து நின்றனர்

பிறகு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்களும் மஜகவில் வசீம் அக்ரம் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து பேசினர்.

இதை முன்னிட்டு மாலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, நிகழ்வுகள் மதியம் 1.30 க்கு நிறைவு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிறகு துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா அவர்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்தாய்வை நடத்தினார்.

செயல்பாடுகள் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து பலரும் ஆலோசனைகளை கூறினர்.

களத்தில் மஜக வின் சட்டசபை தேர்தல் நிலை பாடு தொடர்பான ஆதரவும், பாராட்டும் நீடித்து நிற்பதையும், அது செயல்பாடுகளுக்கு அரணாக இருப்பதாகவும் கூறினர்.

பின்னர் மாநில துணைச்செயலாளர்கள் நாகை. முபாரக், புதுக்கோட்டை துரை, நெய்வேலி இப்ராகிம், மற்றும் அணிகளின் மாநில நிர்வாகிகள் அடுத்தடுத்து தீர்மானங்களை வாசித்தனர்.

தீர்மானங்கள் பகுதி 1, இரங்கல் தீர்மானங்கள் என்றும், பகுதி 2 பொது தீர்மானங்கள் என்றும் பிரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது.

நிறைவாக மாநில துணைச் செயலாளர் வல்லம் அகமது கபீர் நன்றி கூறினார்.

அவர் தலைமையில் தஞ்சை மாநகர மாவட்ட மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தீர்மான பகுதி – 01
………..
இரங்கல் தீர்மானங்கள்:

1. வசீம் அக்ரம் படுகொலைக்கு கண்டனம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வாசிம் அக்ரம் அவர்கள் நேற்று படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

கஞ்சா வினியோகம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கூலிப்படை மூலம் இப் படுகொலை நடத்தப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.

இவ்விஷயத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்றும், அவரது மனைவிக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை ஒன்றை வழங்க வேண்டும் இம்மண்டல செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது..

அவரை இழந்து தவிக்கும், குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும், ஊர்மக்களுக்கும் எமது ஆறுதலை தெரிவிப்பதுடன், அவரது மறு உலக வாழ்வுக்காக பிரார்த்திக்கிறது

2.. கோவை நாசர் பாய்க்கு இரங்கல்

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணியின் செயலாளர் கோவை . நாசர் அவர்களின் மறைவுக்கு இம்மண்டல செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது மறுவலக வாழ்வுக்காக பிரார்த்திக்கிறது.

அவரது பணிகளை இம்மண்டல செயற்குழு நன்றியுடன் நினைவு கூறுகிறது.

3. சையது அலி ஷா கிலானிக்கு இரங்கல்

காஷ்மீர் மக்களின் தேசிய இன போராட்டத்தின் குரலாக எதிரொலித்த சையது அலி ஷா கிலானி அவர்களின் மரணத்திற்கு இம் மண்டல செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறு உலக வாழ்வுக்காக பிரார்த்திக்கிறது.

4. சபியா படுகொலைக்கு கண்டனம்

டெல்லியில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரி சபியா என்பவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் கோரமாக கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கு, தலைநகரில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு வேதனையளிக்கிறது.

அதன் பின்னணி எதுவாக இருப்பினும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென என மண்டல செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மான பகுதி – 02
……………….

1. முதல்வருக்கு நன்றி

CAA குடியுரிமை கருப்பு சட்டத்திற்கு எதிராகவும், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் இம் மண்டல செயற்குழு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

2. சிறைவாசிகள் விடுதலை

எதிர் வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளையொட்டி , 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மண்டல செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இதில் இறுதி முடிவெடுக்கும் வரை , அவர்கள் அனைவருக்கும் நீண்ட கால பரோல் வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

3. கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கை

கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்திருப்பதாக வரும் ஊடக செய்திகள் வேதனையளிக்கிறது.

இதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் சட்டசபையில் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

தமிழகத்தின் எதிர்கால தலைமுறைகளின் நலம் காக்கும் வகையில் இவ்விஷயத்தில் கஞ்சா வினியோகம் செய்பவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4. விமான நிலையங்கள்

தஞ்சாவூரில் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு வழி செய்யும் வகையில், விமானப்படை தளத்தை பயன்படுத்தி புதிய விமான நிலையத்தை விரைவில் செயல்படுத்த ஒன்றிய அரசு துரிதமாக செயலாற்ற வேண்டும் என்றும், அதுபோல் காரைக்கால் விமான நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடித்து அதை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று இம் மண்டல செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

5. நாகை துறைமுகம்

நாகையில் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகத்தை விரிவுபடுத்தி, சரக்கு போக்குவரத்திற்கான நவீன பசுமை துறைமுகமாக அதை உருவாக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம் மண்டல செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

6. தீயணைப்பு நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் 14 கிமீ தொலைவிலிருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு செம்பனார்கோவில் பகுதியில் புதிய தீ அணைப்பு நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம் மண்டல செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

7. ரயில் சேவை

திருவாரூர்-காரைக்குடி வழி தடத்தில் முன்பு மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இராமேஸ்வரத்திலிருந்து சேது விரைவு ரயிலும், காரைக்குடியிலிருந்து கம்பன் விரைவு ரயிலும் சென்று வந்தன. அகல ரயில் பாதை பணிகளுக்காக இந்த விரைவு ரயில்கள் வேறு ஒரு வழித்தடத்திற்கு மாற்றப்பட்டது. திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் முடிந்து நீண்ட காலமாகியும் இந்த தடத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படாமல் இருந்து வருவது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஆகவே மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காரைக்குடி-திருவாரூர் அகல ரயில் பாதையில் சென்னைக்கு மீண்டும் விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என ஒன்றிய அரசை இம் மண்டல செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

8. ஆறு வழி சாலை

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையின் முக்கியத்துவம் அதை ஆறு வழி சாலையாக அமைக்க தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் இம்மண்டல செயற்குழு கேட்டுக் கொள்கிறது

9. கட்சி வளர்ச்சி

டெல்டா மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கட்சியின் உள் கட்டமைப்புகளை மேலும் வலிமைப்படுத்தி , மாவட்ட பொதுக் குழுக்களை நடத்து என்றும் இம்மண்டல செயற்குழு தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்களுடன் ,மதிய விருந்தோம்பலுடன் டெல்டா மண்டல செயற்குழு நிறைவடைந்தது.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
தலைமையகம்.
11.09.2021