சுதந்திரமும் கதர் துணியும்… தோப்புத்துறை மணவிழாவில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு..!

தோப்புத்துறையில் முஹ்மதியா குடும்ப திருமண நிகழ்வு நடைபெற்றது.

மணமகன் நசீம் பாட்ஷா, மணமகள் பர்ஹானா சபீன் ஆகியோரை வாழ்த்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசினார்.

அப்போது மணமக்களுக்கு சந்தன மரக்கன்றுகளை பரிசளித்தார்.

அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு…

இந்தியாவின் சுதந்திர தின பவள விழா நாளில் இத்திருமணம் நடக்கிறது.

மணமக்களுக்கு நாமெல்லாம் வாழ்த்துக் கூற கூடியுள்ளோம்.

அவர்களுக்கு திருமண வாழ்த்தையும், உங்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பொருத்தமான நிகழ்விற்கு ஏற்ற ஒரு வரலாற்று செய்தியை கூற விரும்புகிறேன்.

சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம்களின் திருமண வீடுகளில் மணமக்களுக்கு கதர் துணியை அணிவித்து சிறப்பு செய்வார்கள்.

அதற்கு பின்னணி உள்ளது.

காந்தியார் தலைமையில் அன்னிய பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் தீவிரமாக இருந்த நேரம். ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட துணிகளும் நிராகரிக்கப்பட்டன.

அப்போது மெளலானா முகம்மது அலியும், மெளலானா செளக்கத் அலியும் காந்தியின் தளபதிகளாக திகழ்ந்தனர்.

அவர்களின் தாயார் பீவி அம்மாளும் சுதந்திர போராட்ட களத்தில் இயங்கினார்.

காந்தியாருக்கு இந்திய மூலப்பொருட்களை கொண்டு கையால் தயாரித்த துண்டு ஒன்றை பீவி அம்மாள் பரிசளித்தார்கள்.

இது கண்ணியம் என பொருள்படும் ‘கதர்’ ஆடை என பெயர் சூட்டி பரிசளித்து மகிழ்ந்தார்கள்.

பின்னர் காந்தியாரும், விடுதலைப் போராட்டத்தினரும் அந்த கதர் ஆடையை அணிவதை மக்கள் இயக்கமாக மாற்றினார்கள்.

அப்போது முஸ்லிம்களின் திருமண நிகழ்வுகளில் இந்த கதர் ஆடையை மணமக்களுக்கு போர்த்தி, விடுதலை உணர்வை தூண்டினார்கள்.

அப்படி பல வகையிலும் விடுதலை எழுச்சி பரவியது.

காந்தியார் திருச்சிக்கு வந்த போது காஜாமியான் என்ற செல்வந்தர் கதர் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ, வெற்று காசோலையில் கையெழுத்திட்டு காந்தியிடம் கொடுத்தார்.

நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமென்றாலும் அதில் நிரப்பிக் கொள்ளலாம் என்றார்.

அந்த வள்ளலின் பெயரைத்தான் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு பெயராக சூட்டி உள்ளனர்.

இப்படிப்பட்ட தியாகிகளால் பல வடிவங்களில் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த சுதந்திரத்தின் பவள விழா நாளில் இத்திருமணம் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மஜக மாநிலச் செயலாளர் நாச்சிகுளம்.தாஜூதீன், மாநில துணை செயலாளர் நாகை. முபாரக், மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொதக்குடி ஜெய்னுதீன், தோப்புத்துறை மன்சூர், திருப்பூண்டி சாகுல், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சுல்தான், திருவாருர் மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி உள்ளிட்ட மஜக வினரும் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.