முதல்வருக்கு நன்றி, மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA அறிக்கை!

கொரணா தொற்று நோயுக்கு எதிராக உலகமே ஒரணியில் நின்று போராடுகிறது.

இந்நிலையில் சில தீய சக்திகள் அதை மதத்தோடு தொடர்படுத்தி , சமூகத்தில் பெரும் பீதியை உருவாக்கி விட்டனர்.

ஒரு சிலரின் தவறுகளையும், கவனக்குறைவு களையும் ஒரு சமூகத்தோடு முடிச்சுப் போட்டு சித்தரிப்பது என்ன நியாயம்? என்ற கேள்விகள் எதிரொலிப்பது ஆறுதல் அளிக்கிறது.

இதை கண்டித்து அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கருத்து கூறியுள்ளனர்.

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் ” கொரணாவை மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது” என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

இது போன்ற பதட்டமான பரப்புரைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

சமூக பதற்றத்தை தணிக்கும் வகையில் கருத்துக் கூறியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மற்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவையும், சமூக இடைவெளியையும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இக்காலக்கட்டத்தில் சமூக இணைய தளங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட அனைவரும் முன் வரவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம்.

ஒரு தாய் மக்களாக எல்லோரும் இதயங்களால் இணைந்து நின்று கொரணா ஒழிக்க உறுதியேற்போம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

04.04.2020