முப்படைகளுக்கும் ஒரே தலைமை பதவி, இந்திய ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல : முதமிமுன் அன்சாரி MLA

#மஜக பொதுச்செயலாளர் அறிக்கை..!!!

இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தலைமை தளபதி தான் செயல்படுவார் என தீர்மானித்து, அதன் படி பிபின் ராவத் அவர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுவரை முப்படைகளின் தலைமை பொறுப்பு குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

நம் நாட்டில் ராணுவ புரட்சி நிகழ்ந்து விட கூடாது என்ற தூர நோக்கு சிந்தனையோடு அந்த முறை பின்பற்றப்பட்டு வந்தது.

ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது, அன்றைய ராணுவ தளபதியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு நீடித்து வந்தது.

அப்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் ராணுவ கிளர்ச்சிகள் நடைப்பெற்று அங்கெல்லாம் அரசுகள் மாறுதல்களுக்கு உள்ளாகி வந்தன.

அந்த நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், முப்படைகளும் ஒருவரின் கையில் இருந்தால் அது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்று கூறி முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகளை நியமித்து, அவற்றை குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு அன்றைய பிரதமர் நேருவுக்கு ஆலோசனை கூறினார். அதுவே சிறந்த யோசனை என ஏற்று அப்படியே நேரு அவர்கள் அதை செயல்படுத்தினார்.

இந்த பின்னணிகளையெல்லாம் மறந்து விட்டு, இன்று முப்படைகளுக்கும் ஒரே ராணுவ தளபதி என முடிவு செய்யப்பட்டிருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் கருத்தாகும்.

பிரதமருக்கும், ராணுவ தலைமை தளபதிக்கும் துரதிர்ஷ்டவசமாக ஒரு கருத்து வேறுபாடு நிகழ்ந்தால், அதன் பின் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை கூட சிந்திக்காமல் மத்திய அரசு இம்முடிவை மேற்கொண்டது நாட்டு நலனை கருதும் அனைவருக்கும் கவலையளிக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
31.12.2019