இன்குலாபுக்கு சாகிதிய அகாடமி விருது! இன்குலாப் ஜிந்தாபாத்!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

வாழ்நாள் முழுக்க மக்களுக்கான கவிஞரக வாழ்ந்து சென்ற பேரா.இன்குலாப் அவர்களின் “காந்தன் நாட்கள்” நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், எழுத்தாளன் பூமா வாசுகி மொழி பெயர்ந்த “கசாக்கின் இதிகாசம்” என்ற நூலுக்கு சிறந்த மொழியாக்கத்துக்கான விருதும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பேரா.இன்குலாப் அவர்கள் புது கல்லூரியில் எனது தமிழ் பேராசிரியர் என்பதால் அவரையும்,அவரது முற்போக்கு கொள்கைகளையும், மனிதாபிமான சிந்தனைகளையும் நன்கு அறிவேன்.

அவரது ஒவ்வொரு எழுத்துகளும் சமூகத்தை உசுப்பிய ஆயுங்கள் என்பதை அனைவரும் அறிவர்.அவர் நமது காலத்தில் வாழ்ந்த பாரதிதாசன் என்றால் மிகையில்லை.

அவர் விருதுகளுக்காக எழுதியவர் அல்லர். தவறு என்றால் யாரையும் அவர் எதிர்ப்பார். எல்லோரும் ராஜராஜ சோழனை புகழும்போது, அவனது மறுபக்கத்தை கண்டறிந்து கண்டனம் செய்த முதல் தமிழ் படைப்பாளி அவர்தான்.

திராவிட இயக்கத்திலிருந்து புறப்பட்டு, மார்க்ஸிய களத்தில் வாள் சுழற்றிய அவர் தேவைப்படும் தருணங்களில் கம்யூனிஸ்ட்துகளின் மீதும் அவர் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவரது மறைவுக்கு பின்னால் உயரிய “சாகித்ய அகடாமி” விருது அவருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்நாளில் விருதுகளை ஏற்காத அந்த போராளிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதை, அவரது கொள்கைப்படி நாங்கள் வாங்க மாட்டோம் என அவரது குடும்பம் அறிவித்திருப்பது இன்குலாபுக்கு மேலும் புகழை சேர்க்கிறது.

பேரா.இன்குலாப் தனது குடும்பத்தை தனது வழியில் நடத்தி, இப்போதும் தமிழ் சமூகத்திற்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அவரே பின்வருமாறு எழுதிருக்கிறார்.

எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன். அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும் என்று இன்குலாப் எழுதியுள்ளார்.

விருதை அவரது குடும்பம் பெறாமல் போகலாம். ஆனால் அவரை விருதுக்கு தேர்வு செய்த குழுவின் முடிவு வரலாற்றில் இடம் பெறுகிறது. எதிர் நிலை எடுத்ததன் மூலம் அவரது குடும்பமும் வரலாற்றில் புகழ் பெறுகிறது.

இவண் :
#M_தமிமுன்_அன்சாரி_MLA,
22/12/2017.