இந்தியாவின் அடையாளம் தாஜ்மஹால்!

image

(மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு)

தாஜ்மஹாலை ” உ. பி. மாநிலத்தின் கலாச்சார பாரம்பர்யம்” என்ற பட்டியலிலிருந்து நீக்கி சர்ச்சையை உருவாக்கியிருக்கிறார் பா ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத். மதவெறி; காவி வெறியாகி புகை மூட்டமாக தாஜ்மஹாலைச்  சூழ்ந்திருக்கிறது.

தாஜ்மஹாலை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி மதிக்கிறார்கள்;  ரசிக்கிறார்கள். சிலருக்கு அது அன்பின் அழகு; சிலருக்கோ காதலின் அடையாளச் சின்னம் .
சிலருக்கு கட்டிடக்கலை நாகரிகத்தின் உச்சபட்ச வடிவம்!  சிலருக்கோ அது இந்தியாவின் சகோதரத்துவம்!

மொத்தத்தில் அது ஏழு உலக அதிசயங்களில் ஒன்று! அது சர்வதேச அளவில் ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுச் செல்வங்களில் ஒன்றாகவும் பேணப்பட்டு வருகிறது. வருடந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்வையிடும் ஒரே சுற்றுலாத்தளம் தாஜ்மஹால்தான்!

அதை சுற்றுலாப் பட்டியலிலிருந்து உ.பி., பா.ஜ.க. அரசு நீக்கியிருப்பது அவர்களின் நாணயமற்ற மதவெறி செயல்பாடு என்பதை நாடே அறிந்து விட்டது.

வெளிநாடுகளிலிருந்து தாஜ்மஹாலைப் பார்ப்பதற்காகவே பலர் இந்தியாவிற்கு வருகின்றனர். பல நாட்டுத் தலைவர்கள் அரசியல் வருகை மேற்கொள்ளும்போது கூட, தாஜ்மஹாலைப் பார்க்க நேரம் ஒதுக்குகிறார்கள்! இந்தியாவில் வேறு எந்த இடத்திற்கும் சர்வதேச அளவில் இவ்வளவு முக்கியத்துவம் கிடைப்பதில்லை.

அழகின் அழகான தாஜ்மஹாலை பா.ஜ.க. அரசு ஒதுக்குகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள அறுதிப்பெரும்பான்மையான இந்துக்கள் இதை ஏற்கவில்லை.

அவர்கள் மனிதநேயத்தையும், பாரம்பரிய ஒற்றுமையையும் விரும்புபவர்கள். எனவே கண்டனங்கள் குவிகின்றன. .
தாஜ்மஹாலை ஒரு முஸ்லிம் மன்னரின் தயாரிப்பு என்பதால் அதை நிராகரிப்பது நியாயமில்லை என்று கூறுகிறார்கள்

அது நம் இந்தியாவின் அடையாளம்; மதங்களை, சாதிகளை, இனங்களை, தேசங்களைத் தாண்டி ரசிக்கப்படும் ஒரு பாரம்பர்ய கட்டிடக்கலை!

தொழில் புரட்சியும், அறிவியல் மறுமலர்ச்சியும் ஏற்படாத காலத்தில் கருவிகளே இல்லாமல் கட்டப்பட்ட உன்னதப்படைப்பு!

இத்தாலியிலிருந்து சூரத் துறைமுகம் வழியாக வரவழைக்கப்பட்ட உயர்தர சலவைக் கற்கள் யானைகளின் துணையுடன் ஆக்ராவுக்கு வரவழைக்கப்பட்டு, மிகுந்த தூர நோக்கோடும் அதிக ரசனையோடும் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு தாஜ்மஹால் கட்டப்பட்டது.

அதே சமயம், அது யமுனை நதியின் வெள்ளப்பெருக்குகளில் மூழ்காத வண்ணம் உயரமான வகையில் அமைக்கப்பட்டது.

அதன் நான்கு மினார்களும், ஒரு வேளை விழ நேரிட்டால் , அது தாஜ்மஹாலின் மையப்பகுதியில் விழாத வண்ணம், வெளிப்புறம் சற்று சாய்ந்த வகையில் கட்டப்பட்டது. உன்னிப்பாக கவனிக்கும் பொறியாளர்களுக்கு அது புரியும். அதன் ஒவ்வொரு பகுதியிலும் அழகும், கட்டிடக்கலை நேர்த்தியும் பொறியியல் நுட்பமும் தென்படும்!

முகலாய மன்னர் ஷாஜஹான் 23 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு 21 ஆண்டுகள் இந்த அழகிய – வேறு எவரும் எப்போதும் கட்டமுடியாத காவியத்தை கட்டிடமாக உருவாக்கினார்.

‘என் அம்மா மும்தாஜுக்கு’ மக்களின் வரிப்பணத்தில், இவ்வளவு செலவில் இந்தக்கட்டிடம் தேவையா? என ஷாஜஹானின் மகன் மன்னர் அவுரங்கசீப் கேள்வியெழுப்பினார்.

அவுரங்கசீப்புக்கு பயந்தே தாஜ்மஹாலை அவசரமாகத் திறந்து வைத்தார் ஷாஜஹான். அதன் உள்ளே சில இடங்களில் சலவைக் கற்கள் பதிக்கப்படவில்லை, வெள்ளை நிற சலவைச் சுண்ணாம்பு சிமெண்ட் தான் பூசப்பட்டிருக்கிறது. உள்ளே சென்று உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு அது புரியும். 21 ஆண்டுகள் கடப்பதை நீட்டிக்காமல் அவசரமாகத் திறந்ததன் அடையாளம் அது!

தன் மனைவியின் மீதான அன்பை, வெள்ளை நிறத்தில் யமுனை நதியின் ஒரு புறம் பாரசீக (ஈரான்) பொறியாளரின் கைவண்ணத்தில் தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான், யமுனை நதியின் மறுபுறத்தில் தன் மனைவி இறந்ததன் துக்கத்தை வெளிப்படுத்த கருப்பு நிறத்தில் மற்றொரு தாஜ்மஹாலைக் கட்டத் துடித்தார்.

மக்கள் வரிப்பணம் ஆடம்பரமாக செலவு செய்யக்கூடாது என அவுரங்கசீப் எதிர்த்ததால், அடித்தளத்துடன் அத்திட்டம் நிறைவேறாமலேயே கைவிடப்பட்டது. அந்த அடித்தளம் இப்போதும் அங்கே காணக்கிடக்கிறது. இது வரலாறு!

ஆங்கிலெயர் ஆட்சி காலத்திலும் தாஜ்மஹாலுக்கு சோதனை வந்தது! அதன் அழகில் மயங்கிய ஆங்கிலேய அதிகாரிகள், அதை பெயர்தெடுத்து இங்கிலாந்தில் கட்ட முடியுமா? என்றும் யோசித்து இருக்கிறார்கள்! அது முடியாது என்பதால் அத்திட்டத்தை கைவிட்டார்கள்.

பிறகு அதில் பாதிக்கப்பட்டிருந்த விலைமதிப்பற்ற நவரத்தின கற்களை திருடி, அந்த இடங்களில்  சாதாரண கற்களை பதித்தனர். மைய பகுதியில் உள்ள பெரிய மாடத்தில் வைக்கப்பட்டிருந்த  தங்கத்தால்  செய்யப்பட்ட பிறை திருடப்பட்டு வேறொரு வடிவம் வைக்கப்பட்டது. இது பிந்தைய கால வரலாறு!

பிறகு சங்பரிவார அமைப்புகள் தஜ்மஹாலை ஒரு சிவன் கோவில் என்று கூறி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்கள். இது சமீபகால வரலாறு.

இப்படி தாஜ்மஹாலுக்கு பல நெருக்கடி ஏற்பட்ட வரலாறுகள் உண்டு.
இவற்றை கடந்து உலக மக்களின் பேராதரவுடன் தாஜ்மஹாலின் அழகு போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

நிலாக்கால இரவுகளில், தாஜ்மஹாலை ரசிப்பதற்காகவே உலகமெங்கும் இருந்து ரசிகர்கள் வருகிறார்கள். தபேலாவின் தாளங்களும், ஷெனாய் இன்னிசையும் வருபவர்களை குஷிப்படுத்தும்.

சுற்றிலும் உள்ள அழகிய முகல் தோட்டம், பச்சை சிரிப்போடு அனைவரையும் வரவேற்கும். எதிரே உள்ள நீளமான நீர்தொட்டியில் கிடக்கும் தண்ணீரில் தாஜ்மஹாலின் எழில் தெரியும்.

தாஜ்மஹாலை சுற்றி வரும்போது, யமுனை நதியை கடந்து வரும் தென்றல் ரசிகர்களை சொக்கவைக்கும்.

ஆம்! சுற்றுலா பயணிகளை இரண்டாக பிரிக்கவேண்டும். தாஜ்மஹாலை பார்த்தவர்கள், பார்க்காதவர்கள் என்று.

ஷாஐகான் தன் மனைவி மும்தாஜ் மீது வைத்த அன்பின் அடையாளம், காலந்தோறும் மக்களை ஈர்த்து வருகிறது. இந்தியாவிற்கு  அது மில்லியன் கணக்கில் சுற்றுலா வருவாயை ஈட்டி தருகிறது.

மதவெறியின் புகை மூட்டத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வெள்ளைத் தாஜ்மஹாலின் மீது தூசு படிய அனுமதிக்கக் கூடாது!

எகிப்தின் பிரமீடு, தஞ்சை பெரிய கோயில், பிரான்சின் ஈபிள் டவர், பாபிலோன் தொங்கும் தோட்டம், சீனப் பெருஞ்சுவர், கிரேக்க தேவாலயம், கம்போடியாவின் பவுத்த கோவில் இவையெல்லாம் மனித சமூகம் தன் உழைப்பால் உருவாக்கிய கட்டிடக்கலை நாகரீகங்கள்!

இவற்றுக்கெல்லாம் கொள்கை அடையாளங்களைப் புகுத்தக் கூடாது. தொன்மையான கட்டிடக்கலை நாகரீகமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்! அதுவே  நாகரீக சமுதாயத்தின் அணுகு முறையாகும்!

M. தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
04/10/2017.