(நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)
நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதி, திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட நரிமணம், குத்தாலம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மத்தியக்குடி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன.
இதில் மத்தியக்குடி கிராமத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன. இவ்வூரில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து எண்ணெய் செல்லும் குழாயில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட உடைப்பால் எண்ணெய் கசிவு ஏற்பட்டு நிலத்தில் எண்ணெய் வெளியாகியுள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுப்பட்டுள்ள ONGC நிறுவனம் எண்ணெய் குழாய்களை சரிவர பராமரிக்காததால் துருப்பிடித்து குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற விபத்துகள் மூடி மறைக்கப்படுகிறது.
ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பெரியவர்களும், குழந்தைகளும் சுவாச கோளாறுகள் ஏற்ப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றசாட்டுகிறார்கள்.
ONGC நிறுவனம் இப்பகுதியின் இயற்கை வளங்களை எடுக்கும் நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உருப்படியாக ஏதும் செய்வதில்லை.
“யானை பசிக்கு சோளப்பொரி” என்பதுபோல் ஒருசில வேலைகளை மட்டும் செய்துவிட்டு மக்களை ஏமாற்றி வருகிறது என சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள்.
உடனடியாக ONGC நிறுவனம் இப்பகுதியில் உள்ள எண்ணெய் குழாய்களை சரிசெய்து மக்களின் அச்சத்தை போக்குமாறு கேட்டுகொள்கிறேன். இல்லையெனில் மக்களை திரட்டி ONGC நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறேன்.
இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA.,
நாகை சட்டமன்ற உறுப்பினர்
03/10/2017