சென்னை.ஆக.29., பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் சார்பில் சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது, அது மக்கள் கருத்தாகவும் மாறியது.
தற்போது பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்துள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து மூன்று கட்சி தலைவர்களான M.தமிமுன் அன்சாரி MLA, உ.தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி கூறினர்.
உங்கள் மூன்று பேரின் கோரிக்கைகளை ஏற்றே இந்த அரசு செயல்படுத்தியதாக முதல்வர் தெரிவித்தார்.
அப்போது MGR நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 3 MLA க்களும் முதல்வரிடம் வலியுறுத்தினர்.
10 ஆண்டுகளா? 14 ஆண்டுகளா? என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாகவும் முதல்வர் மூன்று தலைவர்களிடமும் விளக்கினார்.
இதில் அரசியல், வழக்கு, சாதி, மத பேதமின்றி கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றதற்கு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி செயல்படுவோம் என்றும் முதல்வர் கூறினார்.
அச்சந்திப்பிற்கு மூன்று கட்சிகளின் தலைவர்களும் அண்ணா அறிவாலயம் சென்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க ஆதரவு நல்கியதற்கு நன்றி கூறினர். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் மற்றும் முன்னாள் அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும் உடனிருந்தனர்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முரசொலி பவள விழா மலரை மூவருக்கும் வழங்கினார்.
பேரறிவாளனின் பரோலுக்கு கோரிக்கைக்கு உதவியதுபோல 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கவும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். என்றும் இது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவரிடம் மூவரும் கோரிக்கை விடுத்தனர்.
அதை எதிர்கட்சி தலைவர் ஏற்றுக் கொண்டார். அருகில் இருந்த திரு துரைமுருகன் அவர்களும் இது ஒரு மனிதாபிமான பிரச்சனை என்பதை ஏற்றுக்கொண்டார்.
பிறகு நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து திராவிட கட்சிகளுக்கு பாஜக-வால் ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்தும் நல்லெண்ண ரீதியாக கருத்துகள் பரிமாறப்பட்டது.
திமுக தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
அதன் பிறகு அதிமுக
துணைப் பொதுச்செயலாளர் திரு.T.T.V.தினகரன் இல்லத்திற்கு மூன்று தலைவர்களும் சென்றனர். அங்கு T.T.V. அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பேரறிவாளனின் பரோல் குறித்து ஆரம்பத்தில் தனியரசு MLA அவர்கள் அவரிடம் வைத்த கோரிக்கை இன்று சாத்தியமானதற்கும், அவரது ஆதரவு MLA க்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் முன் விடுதலை குறித்து அவரின் ஆதரவும் கோரப்பட்டது. நிச்சயம் இதற்கு குரல் கொடுப்பதாகவும் TTV தினகரன் கூறினார்.
தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் மூன்று தலைவர்களும் தங்களது கவலைகளை அவரிடம் தெரிவித்தனர். திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் மூன்று தலைவர்களும் கூறினர்.
தமிழ்நாட்டின் நலன்கள் மற்றும் தமிழர்களின் உரிமைகளை காக்கும் வகையில் மூன்று கட்சிகளும் செயல்பட்டு வருவதையும் அவரிடம் எடுத்து கூறப்பட்டது.
தகவல்;
இளம் செய்தியாளர்கள் குழு
சென்னை.
29.08.17