தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வில் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் முழக்கம்! காங்கேயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!

image

image

image

திருப்பூர்.ஆக.03., இன்று தீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் காங்கேயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தனியரசு MLA , மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , முக்குலத்து புலிபடை தலைவர் சேது.கருணாஸ் MLA ஆகியோர் கலந்து கொண்டு உணர்ச்சிகரமாக எழுச்சியுரையாற்றினர்.

தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும்போது தீரன் சின்னமலையை சமூக நல்லிணக்கத்தின் முன்னோடி என வர்ணித்தார்.

தீரன் திப்புசுல்தானும் , தீரன் சின்னமலையும் இணைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியது  குறித்து உயிரோட்டத்தோடு எடுத்து கூறினார்.

நெப்போலியனுக்கு திப்பு சுல்தான் தூதுக்குழு அனுப்பியபோது அதில் தீரன் சின்னமலையின்  மெய்க்காப்பாளரும் , தேவர் சமுதாயத்தை சேர்ந்தவருமான கருப்பசேர்வை இடம் பெற்றிருந்ததை நினைவு கூறினார்.

அதுபோல் தீரன் சின்னமலையின் படையில் கருப்பசேர்வை , ஓமலூர்.சேமலை படையாச்சி , முட்டுக்கட்டை. பெருமாள்தேவன் , ஃபத்தே முகமது உசேன் உள்ளிட்ட தேவர், கவுண்டர், வன்னியர், நாயக்கர், நாடார், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டோர்கள் என பல சமூகத்தினரும் இருந்ததை பட்டியலிட்டார்.

ஐதர் அலிக்கும் , வேலு நாச்சியாருக்கும் இடையே இருந்த இராணுவ சகோதரத்துவ உறவையும், வேலு நாச்சியாரின் மெய்க்காப்பாளராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குயிலி என்ற வீராங்கணை இருந்ததையும் சுட்டிக்காட்டி, விடுதலை போராட்டத்தில் நமது முன்னோர்கள் காட்டிய சமூக நல்லிணக்கத்தை வியந்து பேசிய போது கூட்டம் ஆர்ப்பரித்தது.

அதனை தொடர்ந்து கருணாஸ் பேசும் போது, நான் பேச நினைத்ததை எல்லாம் சட்டமன்றத்தில் பேசுவது போல் சகோதரர் அன்சாரி இங்கேயும் பேசிவிட்டார் என்றார்.

திப்பு சுல்தான் தீரன் சின்னமலை கருப்பசேர்வை போல நாங்கள் மூன்றுபேரும் இணைந்து இருப்போம் என்றார். மேலும் நாங்கள் ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் தேவை ஏற்பட்டால் தமிழ்நாட்டின் நலனுக்காக யாரையும் எதிர்க்க தயங்கமாட்டோம் என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது.

நிறைவாக தனியரசு பேசுகையில் மூன்று கட்சிகளின் ஒற்றுமை குறித்தும் தமிழர் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் இந்துத்துவ பாசிசத்தை  எதிர்ப்பதன் அவசியத்தை விளக்கி பேசினார்.

இந்த மண்ணின் விடுதலைக்காக எல்லா சமூக மக்களுடனும் தீரன் சின்னமலை இணைந்து போராடியதை நினைவுபடுத்தியவர், அதுபோல எல்லோரும் இப்போது  இணைந்து வாழவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

மூன்று கட்சிகளும் தமிழ்நாட்டின் நலனுக்காக, இணைந்து போராடுவோம் என்றும் எங்களை யாராலும் பிரிக்கமுடியாது என்றும் சூளுரைத்தார்.

எனது சகோதரர் கருணாஸ் அவ்வளவு எளிதில் தேதி தரமாட்டார். சின்னமலை நிகழ்ச்சி என்றதும் உடனே வந்துவிட்டார். அதுபோல மூன்று நாட்களுக்கு முன்பாக தேதி கேட்டதும் அன்சாரியும் தந்துவிட்டார். அந்த அளவுக்கு நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.

எனது சகோதரர் அன்சாரி எப்போதும் எழுதிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருப்பார். அவர் சிறந்த அறிவாளி. அரசியல் , இலக்கியம், வரலாறு, மார்க்கம், கவிதை, கலை என எல்லா தலைப்புகளிலும் எங்களோடு உரையாடுவார். அது எங்களுக்கு பிடித்திருக்கிறது.

இந்நிகழ்வில் மஜகவினரும் , முக்குலத்து புலிபடையினரும் அதிக அளவில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று கூறினார்.

மூன்று கட்சியை சேர்ந்தவர்களும் மூன்று தலைவர்களுக்கும் மாறி மாறி சால்வை அணிவித்து செல்ஃபி எடுத்து சிறப்பு செய்தனர்.

மூன்று தலைவர்களும் கைக்கோர்த்து எழுந்து நின்றபோது அரங்கம் அதிர்ந்தது.

எழுச்சியின் அடையாளமாக வெளியே கட்டப்பட்டிருந்த காங்கேயம் காளைக்கு முன்னால் நின்று மூன்று தலைவர்களும் படம் எடுத்துக் கொண்டனர்.

காங்கேயத்தில் சின்னமலை நினைவேந்தலில் மாபெரும் சமூக நல்லிணக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

தகவல;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்
03.08.2017