இது நிதிஷ்குமாருக்கு அழகல்ல…

image

(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு)

இந்திய தேசிய அரசியலில் மரியாதைக்குரிய தலைவராக உருவானவர் நிதிஷ் குமார் அவர்கள் ராம் மனோகர் லோகியா , ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் அரசியல் தத்துவங்களில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர்.

தேசிய அளவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றவர்களின் வரிசையில் மதிக்கப்பட்டவர்.

நேற்று அவர் நடத்திய அரசியல் கூத்துகளால், ஒரே நாளில் சந்தர்ப்பவாதி என்ற விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

லாலுவின் குடும்ப அரசியலும், ஊழல் புகை மூட்டங்களும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனால் நாட்டின் நலன்கருதி காங்கிரஸ் முன்னெடுத்த சமாதானத்தை நிதிஷ் ஏற்காமல் போனது வருத்தத்திற்குரியது.

அதே நேரம் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவுடன் பெற்ற முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியான அடுத்த 1/2 மணி நேரத்திற்குள் பாஜக ஆதரவுடன் ஆட்சியமைக்கிறார் என்ற செய்தி அனைவருக்குமே அதிர்ச்சியை தந்தது.

இப்படி ஒரு முன் திட்டமிடலோடு நடத்தப்பட்ட சந்தர்ப்பவாதத்தை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதுவும் நிதிஷ்குமார் போன்ற தலைவர்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை.

கொள்கை அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருந்தால் வரவேற்றிருக்கலாம்.நிதிஷ் அடிப்படையில் மதவெறியை எதிர்ப்பவர். அப்போது தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பீகாருக்கு நரேந்திர மோடி வரக்கூடாது என்று சொன்னார்.

இன்று எந்த அடிப்படையில் இப்படியொரு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் நிதிஷ் குமாரையே முன்னிறுத்த வேண்டும் என ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.

அந்த மாபெரும் வாய்ப்பை அவர் பறிகொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல.. நிதிஷ் குமாருக்கு என உருவாகி வந்த வரலாற்றையும் அவர் கலங்கத்திற்கு உள்ளாக்கி விட்டார்.

அவர் ராஜினாமா செய்த தருணத்திலேயே தேர்தலை சந்திக்க போகிறேன் என கூறி இருந்தால் அது அவரை தேசிய கதாநாயகனாக உயர்த்தியிருக்கும். நிதிஷ் தார்மீக நியாயங்களை இழந்து, இருட்டு குகைக்குள் நுழைந்துவிட்டார்.

இவண்;

M. தமிமுன் அன்சாரி MLA,
28.07.2017