நாகை மீனவர்களின் படகுகளை மீட்டுத் தாருங்கள்! சட்டமன்றத்தில் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…!

image

(04/06/2017 செவ்வாய் அன்று தமிழக சட்டப்பேரவையில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ‘தகவல் கோரலின்’ கீழ் கேள்வி எழுப்பி ஆற்றிய உரை)

மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் அவர்களே….

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப் பேட்டையை சேர்ந்த IND-TN-06-MM-523 எண் கொண்ட விசைப்படகில் 24-06-2017 அன்று 8 மீனவர்களும் புறப்பட்டனர். 24-06-2017 அன்று கோடியக்கரைக்கு நேர்கிழக்கே 33 நாட்டிகல் மைல் தொலைவில் நமது இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1.முவிஷ் 2.செல்வம் 3.ராஜசேகர் 4.ரமேஷ் 5.சக்திவேல் 6.செந்தில் 7.வினோத் 8.சங்கர் ஆகிய மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுவதால், அவர்களது குடும்பங்களும் கஷ்டத்தில் தவிக்கின்றன.

அந்த மீன்பிடி படகின் விலை  66 லட்சமாகும். அதில் உள்ள பொருட்களின் மதிப்பு 12 லட்சமாகும்.

அதுபோல எனது நாகை தொகுதிக்கு உட்பட்ட நம்பியார் நகரை சேர்ந்த சத்யன், N.சங்கர், P.செல்லக்கண்ணு, விஜயவேல் ஆகியோருக்கு சொந்தமான நான்கு விசைப்படகுகளும் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் அனைவருக்கும் படகுகளை மீட்டுத்தர வேண்டும். 100 சதவீத மானியத்தில் இவர்களுக்கு படகுகளை வழங்க வேண்டும்.

மேலும் இதுபோல் 135 படகுகள் இலங்கை அரசால் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் 135 படகுகளுக்கும் 100 சதவீத மானியம் வழங்கினால், அரசே அதை ஏற்றால் தமிழக மீனவர் சமுதாயம் அம்மா அரசை வாழ்த்தும்.

இதுகுறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நல்ல பதிலை தரவேண்டும் என பேரவை துணைத் தலைவர் வழியாக கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி!

#அமைச்சர்_பதில்

இதுகுறித்து பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்,

கடந்த 30 அன்று சுஷ்மா சுவராஜ் அவர்களை சந்தித்து பேசியதாகவும், இலங்கை அரசின் செயல் தமிழக மீனவர்கள், தமிழக மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறியதாகவும் விளக்கினார். கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக ஜெயலலிதா அம்மா அவர்கள் இருந்தபோது 357 படகுகளை இலங்கையிடமிருந்து மீட்டதை கூறியவர், இப்போதும் படகுகளை மீட்க நடவடிக்கை எடுப்போம், இல்லையெனில் உரிய நிவாரணம் கொடுப்போம் என்றும் கூறினார்.

தனது பதில் உரையில் மாண்புமிகு நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மூன்றுமுறை M.தமிமுன் அன்சாரி MLA அவைகளின் பெயரை குறிப்பிட்டு அவர் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதாகவும் கூறினார்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
04_07_17