பாராம்பரியத்தை இழக்காமல் பாடத்திட்டங்கள் தேவை..!

(ஜூன் 15 அன்று சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பேசிய உரையின்  நிறைவுப்பகுதி )

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …!

பள்ளிக்கல்வித்துறையில் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. CBSE – பாடத்திட்டம் மட்டுமே சிறந்ததாக கருதி , அதைமட்டுமே பின்பற்றிவிடாமல் உலகம் முழுக்க மாறிவரும் நவீனகல்வி முறைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் சிங்கப்பூரின் கல்வித்துறையை தொடர்புக்கொண்டு அதில் உள்ள நல்ல முன்மாதிரிகளை நமது பாடத்திட்டங்களில் கொண்டுவர முயற்சிக்கலாம் .

மேலும் கல்வி என்பது பண்பாட்டின் கூறு என்பதால்,  நமது தமிழ்நாட்டின் கலாச்சாரங்களை,  பாரம்பரியங்களை இழக்காமல் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் வயதுக்கும், அவர்களின் புரிதலுக்கும் ஏற்றார் போல,  புத்தக சுமைகளை குறைத்து செயல்வழி கற்றலுக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

மேலும் 6 முதல் 10 வகுப்பு வரை உடல் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான உணவு வழக்கத்தின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் செயல் வடிவபாடங்கள் உருவாக்க வேண்டும்.  சீனாவில் ஆரோக்கியமான முறையில் வளரும் தலைமுறையினர் இப்படித்தான் உருவாக்கப்படுகிறார்கள். அதனால் அங்கு இளம் வயது பிள்ளைகள் வலிமையான உடல்கட்டோடும், நோயின்றியும் உணர்கிறார்கள்.

இதை தமிழ்நாட்டிலும் செயல்படுத்தினால் ஆரோக்கியமான உடல் கொண்ட தலைமுறையினர் உருவாகி,  மருத்துவமனைகளில் நோயாளிகள் குறையும் வளமான சூழல் உருவாகும். இதை நமது அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மனநல ஆலோசனை மையம்

போதை பொருள்களுக்கு அடிமையாதல், பாலியல் துன்புறுத்தல்கள், மனஉளைச்சல்,  ஆசிரியர்களால் பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மாணவர்கள் உள்ளாகின்றனர். இதனை சரி செய்யும் வகையில் 1000 மாணவர்கள் பயிலக்கூடிய ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு நடமாடும் / நகரும் ஆலோசனை மையம் அமைக்கப்பட வேண்டும்.

பள்ளி மேலாண்மைக் குழு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு அமைப்புமுறை என்பது கல்வி உரிமைசட்டத்தில் மிக முக்கியமானதாகும். எனவே பொதுகல்வி அமைப்பை நிர்வாக கெடுப்பிடியில் இருந்து தளர்த்தவும், பள்ளிகளின் செயல்பாட்டை மேற்பார்வையிடும் அதிகாரத்தை சமூகத்திடம் கொடுக்கும் வகையிலும் பள்ளி மேலாண்மைக்குழுக்களை வெளிப்படைத்தன்மையோடு மாற்றியமைக்க வேண்டும் .

பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பள்ளிகள்

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட நலத்துறைகளின் கீழ் பள்ளிகளிலும், விடுதிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல ஏற்றத்தாழ்வு மிக்க மனநிலைகள்உருவாகும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இந்த அடையாளங்களை மாற்றாமல்,  இவற்றை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர ஆலோசனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உடற்பயிற்சி

செய்திதாள்களில் தமிழக அரசு 41 புதிய அறிவிப்புகளை கல்வி கொள்கை தொடர்பாக வெளியிட உள்ளதாகவும் ,அதில் ‘யோகா’ வும் ஒன்று என கூறப்படுகிறது . 10 உடற்பயிற்சிகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம் . அதில் ஒன்றை மாணவ – மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கு தேர்வு செய்யும் உரிமையை கொடுக்க  வேண்டும். ‘யோகா’ மட்டுமே தான் உடற்பயிற்சி என கட்டாயப்படுத்தக்கூடாது . அது ஜனநாயக விரோதமானது என்பதை இத்தருணத்தில் பதிவு செய்கிறேன் .

ஆசிரியர் தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம்  , பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆகிய இரண்டுக்குமான நியமனத்தில் தற்போது வெயிட்டேஜ் அதாவது கூடுதல் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது . இதில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது என பலரும் குமுறுகின்றனர்  . எனவே  இதில் மாற்றம் தேவைப்படுகிறது . +2 மற்றும் B.A பட்டப்படிப்புக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கொடுப்பதை நிறுத்திவிட்டு, TET தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே , அந்த மதிப்பெண்களை கொண்டு பதிவு மூப்பு அதாவது சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் .

NCTE – உடைய வழி காட்டுதலை , தமிழக அரசு , தனது அரசாணை எண் 181- ல் இணைத்திருக்கிறது . அதில் பாரா 9-B – யில் TET தேர்வு எழுதியவர்களுக்குத்தான் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது . இதை தமிழக அரசு பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் .

அரசு பள்ளிகள்

அரசு பள்ளிக்கூடங்களில் கட்டுமானம் சரியில்லை , எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்களை கூறி பள்ளிக்கூடங்களை கூட்டாக இணைப்பது என்ற நிலைப்பாடு எழுந்திருப்பதாக கூறப்படுகிறது . அதை அமல்படுத்தும் கிராமப்புற ஏழை – எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் . அதை சரி செய்ய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகளை வழங்க ஆவணம் செய்ய வேண்டும் .

சமச்சீர் கல்வி

சமச்சீர் கல்வி முறை தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதனை மேலும் செம்மைப்படுத்தும் முயற்சிகளில் தமிழக அரசு முனைப்புக்காட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் .

தமிழில்  LKG – UKG வகுப்புகள்

தமிழகத்தில் ஏழை மற்றும் பின்தங்கிய நடுத்தர மக்களின் குழந்தைகள் பொருளாதார வசதியின்மை காரணமாக மழலைகல்வி கற்க முடியாத சூழல் உள்ளது . பால்வாடி மூலம் கிராமங்களில் குழந்தைகளுக்கு நடத்தப்படும் வகுப்புகள் சரியான பாடத்திட்டங்கள் இல்லாமல் செயல்படுகிறது . எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் , அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் மழலைகளுக்கு LKG  மற்றும் UKG  வகுப்புகளை தமிழில் தொடங்குமாறு இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன் .

தகுதி உயர்த்துதல்

கிராமப்புற மாணவ , மாணவிகளின் நலனைக்கருத்தில் கொண்டு இடைநிற்றலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை பனிரெண்டாம் வகுப்பு வரை தகுதி உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் அரசுப்பள்ளிகளில் மேஜைகள் , மின் விசிறிகள் , மின் விளக்குகள் , கணினி வசதிகள் ஆகியவை போதிய அளவில் இருக்கிறதா ? என்பதை கண்காணித்து ஆய்வு செய்து ,தேவைகள் இருந்தால் அவற்றை நிறைவு செய்ய வேண்டும் .

அரசுப்பள்ளிகளில் குறைந்தது 20 கணினிகளை நவீன கணினி ஆய்வகங்களை அமைக்க வேண்டும் .

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை நிகழ்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே  6 – வது பாடமாக சேர்க்க வேண்டும் .

தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல்பாடத்தி சேர்க்க வேண்டும் . மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பி.எட் பட்டதாரிகளை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தமிழகத்தில் 1992 முதல் 2015 டிசம்பர் வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் உள்ளனர் . அவர்களை இத்துறைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சட்டமன்றத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் விரிவாக பேசினார் .

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர்  அலுவலகம்
01.07.2017