(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை)
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக அவ்வூர் பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள் .
இந்நிலையில் , அங்கு குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட விவகாரம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது .
அங்கு பொது மக்களை தடுப்பதும் , வெளியூர்களிலிருந்து வருகை தரும் சமூக ஆர்வலர்களை அனுமதிக்க மறுப்பதும் , அதிரடிப்படையை குவிப்பதும் பல சந்தேகங்களை உருவாக்குகிறது .
கதிராமங்கலத்தில் நடப்பது என்ன? என்ற புதிருக்கு தமிழக அரசு விடை சொல்ல வேண்டும் .
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுசூழலுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திட அனுமதிக்க மாட்டோம் என மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு. ஜெயலலிதா அம்மா அவர்கள் அறிவித்தார்கள் . அவர்கள் உருவாக்கிய இந்த அரசும் , மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி , உரிய விளக்கங்களை இவ்விசயத்தில் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் .
கதிராமங்கலத்தில் போராடிவரும் மக்களின் மீது அடக்குமுறைகளை, அராஜகங்களை ஏவி கதிராமங்கலத்தை போர்க்களமாக்கிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் .
தமிழக காவல்துறை இவ்விசயத்தில் , மக்கள் உணர்வுகளை மதித்து , பொறுப்புணர்வுடன் , மனிதாபிமானத்துடன் செயல்படவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் .
இவண்
M.தமிமுன் அன்சாரி MLA
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
01.07.2017