நீட் மற்றும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மஜக பொதுச் செயலாளர் சட்டமன்றத்தில் உரை…!

image

(கடந்த 15.06.2017 அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மூன்றாம் பகுதி)

தமிழகத்தில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு உயர் கல்வியில் பல சாதனைகளை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு அறிவு தலைநகரமாக மாறி வருவது வரவேற்கதக்கது.

தேசிய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 24.5% இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது 24.5% உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்லூரிகளுக்கான NIRF தர வரிசை பட்டியலில், 2017 ஆம் ஆண்டில். தேசிய அளவில் முதல் 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 கல்லூரிகளில் இடம் பெற்றிருப்பது நமக்கு பெருமையாக இருக்கிறது.

இந்த சாதனைகள் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டலில் பீடு நடை போட வாழ்த்துகிறேன்.

அதோடு இத்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்கிறேன்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பாக, மாண்புமிகு அம்மா அவர்கள் முதல்வராக  இருந்தபோது இந்த அவையில் எனது கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறேன். அதன் பல அம்சங்கள் சமூக நீதிக்கு எதிரானவை.

அம்மா அவர்கள் முதல்வராக இருந்த போது தான் இந்தியாவிலேயே, துணிச்சலாக அமைச்சரவையை கூட்டி புதிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை நிராகரித்தார்.

ஏனென்றால் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பல தலைவர்களை தந்த பூமி தமிழ்நாடு. இந்த புதிய கல்விக்கொள்கை என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரங்களுக்கும், பண்பாடுகளுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. அந்த விஷயத்திலே சமரசம் என்ற கேள்விக்கே இடம்கொடுக்க கூடாது.

அதில் இப்போது மாண்புமிகு எடப்பாடியார் தலைமையிலான அரசு, எந்தெந்த கூறுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றது, எந்தெந்த கூறுகளை நிராகரித்திருக்கின்றது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதை கேட்டுகொள்கிறேன்.

நீட் தேர்வு (NEET)

அடுத்து National Eligibility Cum Entrance Test எனப்படும் NEET  தேர்வு குறித்து கடுமையான எதிர்ப்புகள் தமிழகத்தில் நிலவுகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

தற்போது மருத்துவக்கல்லூரிக்கு மட்டும்தான் NEET தேர்வு என்கிறார்கள். அடுத்து சித்தா , ஆயுர்வேத மருத்துவ படிப்புகளும் வரும் என்கிறார்கள்.

பிறகு பொறியியல் கல்லூரி , கலைக்கல்லூரி, அதைத்தொடர்ந்து ஓவியக் கல்லூரிக்கு கூட இது போன்ற நுழைவுத்தேர்வுகளை கொண்டு வந்துவிடுவார்கள்.

இது போன்ற நுழைவு தேர்வுகளை மத்திய அரசு வைத்துவிட்டால், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும். அது மட்டும்மல்லாமல் கிராமாப்புர மாணவர்கள், பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பெரியளவிலே பாதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் +2 என்ற படிப்பிற்கே மரியாதையற்ற சூழல் ஏற்படும். இதை தடுக்கக்கூடிய மிகப்பெரிய கடமை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் உண்டு.

இதிலே அரசியல் கருத்துவேறுபடுகளை பார்க்காமல், சமூக நீதி பாதுகாக்கப்படவேண்டும், நம்முடைய காலம் சென்ற முன்னாள் தலைவர்கள் ஏற்படுத்தி சென்ற நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலே எல்லோரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதில் நமக்கு ஆதரவான சில விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த மார்ச் 8,2016 அன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு தனது 92வது அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் பாரா 5.26 ல் ஒரு கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறது.

அதாவது அகில இந்திய அளவில் மருத்துவத்திற்கு நடத்தப்படும் COMMON MEDICAL ENTRANCE TEST(CMET) குறித்து  குறிப்பிடும்போது, இதை நடத்த விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் மே.02.2016 அன்று 5 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு மிகத்தெளிவாக ஒன்றை கூறியுள்ளது அதாவது, மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க மாநில அதிகாரத்திற்கு உட்பட்டது என தீர்ப்பளித்தது.

எனவே அண்ணாயிசத்தின் அடிப்படையில் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு துணிச்சலாக தமிழ்நாட்டின் நலனை காக்கவும், சமூக நீதியைகாக்கவும், கல்வியை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் தமது கருத்துக்களை எடுத்து வைத்தார்.

தகவல் தொகுப்பு:
மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
#MJK_IT_WING