கல்வி மானிய கோரிக்கையில் இதுவரை பேசப்படாத கருத்துக்களை முன் வைத்து சட்டப்பேரவையில் மஜக பொதுச் செயலாளர் சிறப்புரை!

சென்னை.ஜூன்.15., நேற்று பள்ளி கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கை விவாதங்களில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கலந்துகொண்டு பேசினார்.

வாழ்வில் அவதூறுகளும், துன்பங்களும், துயரங்களும் முற்றுகையிடும்போது நநம்பிக்கையும், தைரியமும் தேவை. இறைவனின் அருளும், நேர்மையான என்னங்களும், சிறந்த கல்வியும் இணையும்போது அவற்றை எல்லாம் முறியடிக்கும் வலிமையை பெறுகிறோம் என்றார்.

புனித ரமலான் நோன்பை கடைபிடித்த நிலையில் இந்த மாமன்றத்தில் பேசுகின்றேன் என்றவர், இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திப்பதாக கூறினார்.

பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செய்துவரும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். ப்ளஸ் டூவீல் ரேங் முறையை ஒழித்தது, இந்த ஆண்டில் பள்ளிக்கூடம் தொடங்கிய அன்றே பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கு  இறுதியாண்டு தேர்வு தேதிகளை அறிவித்தது ஆகியவற்றை பாராட்டினார்.

மேலும் ப்ளஸ் ஒன் வகுப்புக்கு தேர்வு அறிவித்திருப்பது குறித்து திமுக உறுப்பினர் பொன்முடி கூறிய விசயத்தை தனது பேச்சில் சுட்டிக்காட்டிவர், அதில் சாதகம் அதிகமிருந்தால் செயல் படுத்துங்கள் பாதகம் இருந்தால் விட்டுவிடுங்கள் என்றார்.

நிலா நிலா ஓடிவா, பாடலில் திரிபு செய்யப்பட்ட மத வார்த்தைகளை நீக்கவேண்டும், யோகாவை கட்டாயமாக்க கூடாது, சிங்கப்பூரில் உள்ளதுபோல் குழந்தைகளுக்கு செயல் வழி கற்றலை ஊக்குவிப்பது, சீனாவில் இருப்பதுபோல் உடல் ஆரோக்கியத்துக்கான பாட திட்டங்களை உருவாக்குதல், பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசனை மையங்களை உருவாக்குதல், பள்ளிகளில் மேலாண்மை குழுக்களை சீரமைத்தல், அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளை தொடங்குதல், சமச்சீர் கல்வியை செம்மை படுத்துதல், அனைத்து  நடுநிலை பள்ளிகளையும் மேல்நிலை பள்ளிகளாக உயர்த்துதல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகியன குறித்து புள்ளி விபரங்களோடு பேசினார்.

அரசின் பல்வேறு நலத்துறைகளின் சார்பில் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களை பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றவர், தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் கணிணி அறிவியல் பாடத்தை சேர்க்க வேண்டும் என்றும் அதில் பி.எட் பட்டதாரிகளையும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடுவது குறித்து புதிய அனுகுமுறை தேவை என்று பேசினார்.

காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாற்றை பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்றும், கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரால் சென்னை பல்கலை கழகத்தில் ஆய்வு இருக்கை உருவாக்க வேண்டும் என்றும் கோரினார்.

நீட் தேர்வு மற்றும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்தவர் இது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு, மற்றும் உச்சநீதிமன்ற அமர்வு ஆகியன மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து கூறியுள்ள தகவல்களை ஆதாரங்களுடன் எடுத்து காட்டி பேசினார்.

இவ்விசயத்தில் மாநில அரசு தைரியமாக செயல்பட வேண்டும் என்றவர் எம்.ஜி.ஆர் வெளியிட்ட அதிமுகவின் கொள்கை சாசனமான அண்ணாயிசத்தை அவையில் தூக்கி காட்டினார். அதில் உள்ள “கட்டுண்டு கிடக்க மாட்டோம், பிரிவினை நாடோம்,
சம நிலையில் இணைவோம்” என்ற வாசகத்தை எடுத்துக் கூறி, மத்திய அரசு விசயத்தில் மாநில அரசு எத்தகைய அனுகுமுறையோடு இருக்க வேண்டும் என்று நயத்தோடு சுட்டிக்காட்டினார். அப்படி கூறியதும் அவையின் மொத்த உறுப்பினர்களும் திரும்பிப்பார்த்தனர்.

அவரது மொத்த உரையையும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களும் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தனர்.

ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்கள் அவ்வப்போது மேஜையை தட்டி ஆதரித்தனர். எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு உரையையும் திரும்பிப் பார்த்தவாறு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

அவை முடிந்ததும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா அவர்கள் பொதுச்செயலாளரை சந்தித்து, உங்கள் உரை பயனுள்ளதாகவும், அரசுக்கு ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை கூறும் விதத்தில் இருந்ததாகவும் பாராட்டினார்.

(முழு உரை தலைப்பு வாரியாக  வெளியிடப்படும்.)

தகவல் :
தகவல் தொழில் நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
சென்னை
15.06.2017