நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்களுக்கு வினியோகிப்போம்!

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதல பதிவு)

புனித ரமலான் மாதம் இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்தும் அற்புதமான மாதமாகும். திருக்குர்ஆன் உலக மக்களுக்கு அருளப்பட்ட மாதம் என்பதால் இது கூடுதல் சிறப்பை பெறுகிறது. உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் இறையச்ச உணர்வோடு நோன்பிருந்து, நல்ல காரியங்களை நாள்தோறும் நிறைவேற்றி, பாவங்களிலிருந்து மீளும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

நமது நாட்டில் ரமலான் மாதத்தையும், நோன்பையும் இந்து , கிறித்தவ சகோதரர்களும் மிகுந்த மரியாதையோடு உற்று நோக்குகிறார்கள். தங்களின் நட்பை வெளிப்படுத்தும் வகையில், அவர்களில் சிலர் ஒரு நாள் நோன்பிருந்து ஒரு புதிய அனுபவத்தை பெற்று மகிழ்கிறார்கள்.

முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளில் வாழும், முஸ்லிம் அல்லாத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பொது இடங்களில் ரமலான் மாதத்தில் எதையும் சாப்பிட அனுமதிப்பதில்லை. இது அன்பின் வெளிப்பாடு மட்டுமல்ல, நமது பாரம்பரிய உறவுகளின் உச்சமாகும்.

இத்தகைய சூழலில், சமூக நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு ரமலான் மாதத்தில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புனித ரமலானில் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை சகோதர சமுதாய மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் . இந்நிலையில் அன்பையும் , உறவையும் வலுப்படுத்தும் வகையில் , நோன்பு கஞ்சியை நமது குடியிருப்புகளில், வீதிகளில் வசிக்கும் இந்து, கிறித்தவ மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நாம் கொடுக்க வேண்டும்.

“உங்களில் இணக்கத்தை ஏற்படுத்துவரே சிறந்தவர்” என திருக்குர்ஆன் போதிக்கிறது.

எனவே இன்று முதல் பிறை 20 வரை இதை ஒரு முக்கிய பணியாக முஸ்லிம் சமுதாயம் முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நமது வீடுகளுக்கு அவர்களை அழைத்துக் கொடுக்கலாம். அல்லது அவர்களது வீடுகளுக்கே கொடுத்து அனுப்பலாம்.

சமீபத்தில் மஜக சார்பில் தோப்புத்துறையில் பொது இடத்தில் நோன்பு கஞ்சியை காய்ச்சி, சகோதர சமுதாய மக்களுக்கு வினியோகித்துள்ளார்கள். அது பெரும் வரவேற்பை பெற்றது. இதுபோலும் செய்யலாம்.

ஜமாத்தினர், தங்கள் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட சகோதர சமுதாயத்தவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்து நோன்பு கஞ்சியை நம்மோடு அமர வைத்து கொடுக்கலாம்.

சங்கைமிக்க உலமாக்கள் இப்பணியை பரப்புரையாக நடத்த வேண்டும்.

ஜமாத்துல் உலமா, TNTJ, தமுமுக, PFI, ஜமாத் இஸ்லாமி உள்ளிட்ட இயக்கங்களும், அமைப்புகளும் இந்த நல்லிணக்க முயற்சியில் ஈடுபட வேண்டும்.

புனித ரமலான் மாதத்தில் அன்பையும், விருந்தோம்பலையும் சக மக்களுக்கு பரிசளிப்போம். வெறுப்புகளை அழித்து இணக்கத்தை ஏற்படுத்துவோம்.

அன்புடன்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
06.06.2017