இந்தியாவில் ஒரு தலைவருக்கு ‘கண்ணியத்திற்குரிய’ என்ற அடைமொழி வழங்கப்படுகிறது என்றால் அது காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் (ரஹ்) அவர்களுக்கு மட்டும் தான் என்பது நாடறிந்த உண்மை!
கறைபடாத கரம், நேர்மையான சிந்தனைகள், கண்ணியமான அணுகுமுறைகள், எளிமையான பொதுவாழ்வு, தூய்மையான தனி வாழ்வு, சவாலான விவகாரங்களில் துணிச்சலான முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டின் மீது அவர் காட்டிய அக்கறை, தமிழ் மீதான தணியாத தாகம், சமூக நல்லிணக்கத்தில் அவர் காட்டிய உறுதி இவையாவும் அந்த பெருமகனை வரலாற்றின் வெளிச்சத்தில் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
நேரு, பெரியார், அண்ணா, அபுல்கலாம் ஆசாத், அறிவாசான் அம்பேத்கார், நம்பூதிபாட், தோழர். ஜீவா, ஐயா முத்துராமலிங்கத் தேவர், கலைஞர், MGR, நாவலர் நெடுஞ்செழியன், பேரா.அன்பழகன் என நாடு தழுவிய அளவில் அவர் கொண்டிருந்த நட்புகள் அவரது அணுகுமுறைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்திய – சீன யுத்தம் நடந்தபோது, எனது மகன் மியாகானை ராணுவத்துக்கு பணியாற்ற அனுப்புகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார்.
எது தேசிய மொழி என நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது, என் மொழி தமிழுக்குத்தான் அந்த தகுதி உண்டு என அடித்துப் பேசினார்.
நாடு பிளவுப்பட்ட நிலையில், ஜின்னா அவர்கள் காயிதே மில்லத் அவர்களைப் பார்த்து “உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள். தருகிறோம்” என்றார்.
உங்கள் நாட்டில் (பாக்கிஸ்தான்) உள்ள சிறுபான்மை இந்துக்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும் என்றார் கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்!
முன்னாள் சபாநாயகர் ராஜாராம் அவர்கள் காயிதே மில்லத்தைப் பற்றி உருகி, உருகி எழுதிய கட்டுரைகள் சிலிர்க்க வைக்கின்றன.
ஆம்! என்றும் இந்திய முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டி காயிதே மில்லத் அவர்கள்தான் என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறோம்!
இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
05/06/2017