நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரி கவிக்கோ !

image

(மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர்  M. தமீமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் இரங்கல் அறிக்கை)

பேராசியராகவும், பேரறிஞராகவும், கவிக்கோ எனும் புகழ் வார்த்தையாலும் கொண்டாடப்பட்ட கவிஞர் அப்துர் ரஹ்மான் இன்று விடியற்காலை நம்மை பிரிந்து இறைவனிடம் சேர்ந்திருக்கிறார். (இன்னாலில்லாஹி)

அவர் தமிழ் இலக்கியத்தின் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர். தமிழ் கவிஞர்களுக்கு எல்லாம் தாயாக வாழ்ந்தவர்.

மதுரையில் பிறந்து, வாணியம்பாடியில் வேர்விட்டு, உலகமெங்கும் தன் கவிதைகளால் புகழ் ஈட்டியவர்.

திராவிட  இயக்கப் பற்றாளராகவும், இந்தி திணிப்புக்கு எதிரான போராளியாகவும், தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாளராகவும்  செயல்பட்டவர்.

அவரது இலக்கிய உலகம் வித்தியாசமானது. அறிவியல், ஆன்மிகம், வரலாறு, தத்துவம், ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. ஆலாபனை, பால் வீதி, போன்ற அவரது கவிதை தொகுப்புகள் தமிழ் உலகிற்கு முற்றிலும் புதிதானவை. அவர் ஆழ்கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்தார் என்றால் அது மிகையாகாது. கஜல் , ஹைகூ போன்ற கவிதை வடிவங்களை இவர்தான் தமிழில் பிரபலப்படுத்தினார்.

விருதுகளுக்காகவே எழுதுபவர்கள், விருதுகளை தேடிச் செல்பவர்கள் நிறைந்த இலக்கிய உலகில் இவர் தனித்தன்மை மிக்க கொள்கைவாதியாக இயங்கினார்.

அவரது உரைநடைகளும் புதுக்கவிதை பூக்களோடு அலங்கரிக்கப்பட்டிருக்கும். படிக்க, படிக்க மணக்கும்.

அவரது விமர்சனங்கள் நேர்மையாகவும், கூர்மையாகவும் இருக்கும். நீங்கள் ஏன் சினிமாவிற்கு  பாடல்கள் எழுதுவதில்லை? என்று கேட்டப் போது, “சிற்பிகள் அம்மி கொத்துவதில்லை” என்றார்.

கண்ணதாசனைப் பற்றி கூறும் போது, “கருவாட்டுக் கடையில் விண்மீன்களை் விற்றவர்” என்றார்.

நாட்டுக்கான திட்டங்கள் எல்லாம் ஊழலிலும், ஏமாற்றங்களிலும் முடிவது பற்றி அவர் இவ்வாறு கவிதை எழுதினார்.

வரங்களே சாபங்கள் ஆனால் …
தவங்கள் எதற்காக…?

அவரது கவிதைகளில் ஆழமான சிந்தனைகளும், ஆளுமைகளும், சமூக கோபங்களும், அக்கறைகளும் நிறைந்திருந்தது. அலங்கார சொற்களுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

நான் சென்னை புதுக்கல்லூரியில் படித்த போது, 1997-ல் பேராசிரியர் இன்குலாப் அவர்கள் வழி நடத்திய தேனீக்கள் மன்றத்தின் சார்பில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் மிக சிறப்பாக பேசினார். அவரை முதன்முதலாக சந்தித்தது அப்போதுதான்.

அதன் பிறகு அடுத்தடுத்து எத்தனையோ சந்திப்புகள் எங்களுக்குள் நிகழ்ந்தது. 2003-ல் தோப்புத்துறையில் முஸ்லிம் மாணவர் முன்னணி ஏற்பாடு செய்த சீரத்துன் நபி விழாவில்  அவரை உரையாற்ற அழைத்து வந்தேன். இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது எங்கள் ஊருக்கு அடுத்துள்ள பெரிய குத்தகை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை பார்த்து விட்டு யாழ்ப்பாணம் போல இருக்கிறது என்றார்.

நான் சேப்பாக்கம் – திருவல்லிகேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை  இழந்தபோது, அவர் மிகவும் வருத்தமடைந்தார். பிறகு
நாகப்பட்டினத்தில் வெற்றி பெற்றப்போது மிகவும் மகிழ்ந்தார்.

நான் சட்டமன்றத்தில் அவரது கவிதையை எடுத்துக்காட்டி பேசினேன். உர்து மொழி அகடாமி குறித்து பேசியபோது

“உர்து மொழி
அது மெர்து மொழி
இந்தியவுக்கு கிடைத்த
விருது மொழி”
என்ற அவரின் கவிதையை அவையில் பதிவு செய்தேன்.

கடந்த 6 மாத காலமாகவே அவரை வீட்டுக்கு சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். பணிகள் காரணமாக சந்திக்க முடியாமலேயே போய்விட்டது இப்போது வேதனையாக இருக்கிறது.

கவிகோ அவர்கள் , கடந்த 20 ஆண்டு காலமாக தீவிர ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நபிகள்
நாயகம் (ஸல் ) அவர்களின் பொன்மொழிகளை ஆய்வு செய்வதிலும் , இஸ்லாமிய கோட்பாடுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்வதிலும் ஆர்வம் காட்டினார் .இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் மீட்சிக்காக அரும்பாடு பட்டார்.

சாதி , மதங்களை கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட கவிக்கோ, அவர்கள் , சமூக நல்லிணக்கத்திற்கும் , சமூக நீதிக்கும் ஆதரவாக இயங்கினார். தமிழ் இனத்தின் நலன்களுக்காக உரத்து முழங்கினார். உலக நாடுகளுக்கு எல்லாம் பயணித்தார்.
அரசியலில் அவர் கலைஞர் அவர்களோடு நெருக்கமாக பயணித்தார். அதே நேரம் எந்தக் கட்சியோடும் , இயக்கத்தோடும் தன்னை இணைத்துக் கொண்டதில்லை. கலைஞரின் நட்பு  காரணமாக .அவர் வக்பு வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒரு முறை அவையொன்றில் வலம்புரி ஜான் பேசிக் கொண்டிருந்தபோது,
கவிக்கோ உள்ளே நுழைந்தார் . உடனே வலம்புரி ஜான் அவர்கள் “கவிக்கோ வருகிறார் …. தமிழர்களே எழுந்து நில்லுங்கள்” என்று புகழ் சூட்டினார்.

இன்று கவிக்கோ நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார்.

“தமிழர்களே … உலகத்தின் சன்னலை , தமிழ் கூறும் நல்லுலகிற்கு திறந்து காட்டிய நம் காலத்தில் வாழ்ந்த நடமாடிய பல்கலைக் கழகம் இப்போது மண்ணுக்குள் புதைகிறது. எழுந்து நில்லுங்கள் “என்று சொல்லத் தோன்றுகிறது

இறைவா… கவிக்கோ அவர்கள் அறிந்தும், அறியாமலும் பாவங்கள் ஏதேனும் செய்திருந்தால் அவற்றை மன்னித்து அவரை சுவர்க்கத்தில் இடம் பெற செய்வாயாக !

இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
02-06-2017