
சென்னை.ஏப்.01., அண்ணா IAS அகாடமியின் முன்னாள் இயக்குனரும் சமூக சேவைகருமான பேரா. MF. கான் அவர்கள் இன்று மரணம் அடைந்தார் (இன்னா லில்லாஹி…) என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது..
பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து ஏராளமான IAS, IPS அதிகாரிகளை உருவாக்கிய சமூக நீதி சிந்தனையாளரை இன்று நாம் இழந்திருக்கிறோம்.
தனது குடும்ப நிதியில் இருந்து கல்விப் பணிக்காக 1கோடி ரூபாய் தருவதாக கூறி அதற்க்கு சரியான நபர்களை தேடியலைந்தார்.
அந்தப் பணம் ஏழை எளிய மக்களின் கல்விக்காக நேர்மையாக செலவிடப்பட்ட வேண்டும் என்று நினைத்தார். இது குறித்து பலமுறை என்னிடம் உரையாடிருக்கிறார்.
அவரது தந்தை தீவிர இடதுசாரி களத்தில் இயங்கியவர் பின் தங்கிய மக்களுக்காக போராடியவர் அதே வழியில் பேரா. MF கானும் இயங்கினார்.
மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கிய போது தனது வாழ்த்துக்களை வாயார கூறி மகிழ்ந்தார்.
கடந்த மார்ச் (2016) மாதம் சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு அவரது கால் அகற்றப்பட்டது. அவரை பார்க்க நானும் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மியும் மருத்துவமனைக்கு சென்றோம். அப்போதும் சமூகத்தை பற்றியும், கல்வி குறித்தும் பேசினார்.
அப்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. திடீர் என்று அருகில் இருந்த தனது மனைவியின் பையில் வைத்திருந்த இருபதுனாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து என் கையில் கொடுத்தார். இதை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வைப்புத் தொகையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார், நான் நெகிழ்ந்துவிட்டேன். அப்படிபட்ட ஒரு சமூக சேவகரை இன்று இழந்த துயரம் வாட்டுகிறது.
கல்விக்காகவும் கல்வி பணியில் ஈடு படுகின்ற சேவகர்களுக்காகவும் எல்லா நிலையிலும் துணை நின்ற அந்த நேர்மையான மனிதரின் மறு உலக வாழ்விற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
பேரா. MF கான் அவர்கள் முன்னெடுத்த கல்விப்பணிகளை முன்னெடுப்போம்.
இவண்.
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி.
01.04.2017