மீத்தேன் , ஹைட்ரோ – கார்பன் திட்டங்கள் அனுமதிக்க கூடாது .! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…

image

(பகுதி – 9)

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

நம் தமிழ்நாடு இயற்கை வளங்களைக் கொண்ட நிலம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது .

பசுமை காடுகளை கொண்ட முல்லை , உயர்ந்த மலைகளை கொண்ட குறிஞ்சி , மணல் வளம் கொண்ட பாலை , பயிர்கள் செழிக்கும் மருதம் , கடல்பரப்புக் கொண்ட நெய்தல் என ஐவகை நிலமும் நம் தமிழகத்தின் சிறப்பம்சங்களாகும் .

இதனை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு நாம் பரிசளிக்க வேண்டும். இன்று தமிழகத்தின் ஐந்துவகை நிலத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது .

தென்னிந்தியாவின் மிகப்பெரிய சமவெளியான தஞ்சை சமவெளியில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் உள்ளிட்ட அபாயகரமான திட்டங்கள் அமல்படுத்தகூடாது . அதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி .

இதனிடையே தஞ்சை சமவெளியை ஒட்டி அமைந்திருக்கிற புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் , வடகாடு போன்ற பகுதிகளில் ஹைட்ரோ – கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என அம்மக்கள் போராடினார்கள் . நானும் அந்த போராட்டக்களத்துக்கு சென்றேன் . உணர்வுபூர்வமான போராட்ட களம் அது . சுயநலமின்றி மக்கள் போராடினார்கள் .அவர்களின் உணர்வை மதித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் அந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என்று கூறியது பாராட்டத்தக்கது .

விவசாயத்தை அழித்து , குடிநீரை பாழாக்கி , சுற்றுச் சூழலை நாசம் செய்து ,உருவாகும் எந்த திட்டங்களும் தேவையில்லை . இதற்கு பதிலாக மாற்று எரிபொருளை பெறக்கூடிய திட்டங்களுக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் .

தமிழ்நாட்டில் இளைஞர்களும் , மாணவர்களும் நமது மண்ணின் வளங்களை சுரண்ட அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர் .

அவர்களின் குரலாக இதனை இந்த அவையிலே பதிவு செய்கிறேன் .

இவ்வாறு சட்டப்பேரவையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசினார் .

தகவல்:

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
27-03-2017