மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

image

(பகுதி_8)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே …

மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் .

மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது . இதில் எனது தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு அதிக முன்னுரிமைகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் .

சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில்  நாகப்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் . நானும் அமைச்சர்கள் அண்ணன் ஜெயக்குமார் , அண்ணன் O.S.மணியன் ஆகியோரோடும் அங்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டோம் . கண்ணீரோடும் , கதறலோடும் தங்களின் வேதனைகளை கொட்டினார்கள் .

அவர்கள் மீது இனியொரு தாக்குதல்கள் நடைபெறுவதையோ , வங்கக் கடலில் தமிழக மீனவர் இனி இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்படுவதையோ இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது . இந்த விசயத்தில் மத்திய அரசு இலங்கையை கடுமையாக எச்சரிப்பதோடு மட்டுமின்றி , தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக , இந்திய கப்பல் படை இருநாட்டு கடல் பகுதியில் சிறப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த மாமன்றத்தில் கோரிக்கை வைக்கிறேன்.கைது செய்யப்பட்டுள்ள எஞ்சிய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க தொடர் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 136 படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டிருக்கிறது . அதன் ஒவ்வொன்றின் விலையும் 30 லட்சம் முதல் 1 கோடி வரை மதிப்புமிக்கது .அதை மீட்டுத்தர  மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். அல்லது அதற்கான இழப்பீட்டை தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் .

மத்திய அரசு மறுக்கும் பட்சத்தில் , தமிழக மீனவர்களின் நலனில் அக்கறைக் கொண்ட அம்மா அவர்களின் அரசு , அதை மனிதாபிமானத்தோடு வழங்கி மீனவர்களின் துயரங்களை போக்க முன்வர வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறேன் .

தகவல் :

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
27_03_17