தமிழக மீனவர்களை பாதுகாக்கா இந்திய கடற்படை ரோந்து வர வேண்டும் .! சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !

image

(பகுதி -4)
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே …

மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர்  அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் .

மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது . இதில் எனது தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு அதிக முன்னுரிமைகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் .

சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில்  நாகப்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் . நானும் அமைச்சர்கள் அண்ணன் ஜெயக்குமார் , அண்ணன் O.S.மணியன் ஆகியோரோடும் அங்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டோம் . கண்ணீரோடும் , கதறலோடும் தங்களின் வேதனைகளை கொட்டினார்கள் .

அவர்கள் மீது இனியொரு தாக்குதல்கள் நடைபெறுவதையோ , வங்கக் கடலில் தமிழக மீனவர் இனி இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்படுவதையோ இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது . இந்த விசயத்தில் மத்திய அரசு இலங்கையை கடுமையாக எச்சரிப்பதோடு மட்டுமின்றி , தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாக , இந்திய கப்பல் படை இருநாட்டு கடல் பகுதியில் சிறப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த மாமன்றத்தில் கோரிக்கை வைக்கிறேன்  .கைது செய்யப்பட்டுள்ள எஞ்சிய மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க தொடர் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் .

கேரளா , குஜராத் , மீனவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் இந்திய மீனவர்களாக பார்க்கப்படுகிறார்கள் . ஆனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டால் டெல்லியில் உள்ளவர்கள் அவ்வாறு பார்ப்பதில்லை என்பதை வேதனையோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன் .

மேலும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 136 படகுகள் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டிருக்கிறது . அதன் ஒவ்வொன்றின் விலையும் 30 லட்சம் முதல் 1 கோடி வரை மதிப்புமிக்கது . அதை மீட்டுத்தர  மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும். அல்லது அதற்கான இழப்பீட்டை தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் .

மத்திய அரசு மறுக்கும் பட்சத்தில் , தமிழக மீனவர்களின் நலனில் அக்கறைக் கொண்ட அம்மா அவர்களின் அரசு , அதை மனிதாபிமானத்தோடு வழங்கி மீனவர்களின் துயரங்களை போக்க முன்வர வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறேன் .

இவ்வாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் பேசினார் .

தகவல்

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
25-03-2017