கோவை மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி…!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை , பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக் கோரி ஜனவரி 8, அன்று கோவை சிறையை முற்றுகையிடும் போராட்ட அறிவிப்பு ; கோவையில் பலதரப்பட்ட மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதை ஒழுங்கமைக்கும் வகையில் கோவை மாநகர மஜக நிர்வாகிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் கூட்டம், வசந்தம் மஹாலில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தலைமையில் எழுச்சியுடன் நடைப்பெற்றது.

துணைப் பொதுச் செயலாளரும் , போராட்டக் குழுவின் தலைவருமான செய்யது அஹமது பாருக், மற்றும் துணைப் பொதுச் செயலாளரும் , போராட்ட குழுவின் துணைத் தலைவருமான AK.சுல்தான் அமீர், ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினர்.

மாநில துணைச் செயலாளர் கோவை அப்துல்பஷீர், MJTS மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநிலச் செயலாளர் இஷாக் ஆகியோரின் கருத்துரைகளுக்கு பிறகு, நிர்வாகிகளிடம் கருத்து கேட்புகளும் நடைப்பெற்றது.

பின்னர் கோவை மாநகரில் மட்டும் 7 ஆயிரம் 10 ஆயிரம் பேரை திரட்டும் வகையில், ஆயத்த நடவடிக்கைகளை பல்வேறு வகையில் முன்னெடுப்பது குறித்து திட்டங்கள் வகுக்கப்பட்டது.

அதன் ஒரு தொடக்கமாக ஆட்டோ பேனர், சுவரொட்டி, பைக் ஸ்டிக்கர், துண்டு பிரசுரம் ஆகிய விளம்பர வடிவங்களை நிர்வாகிகள் கையிலேந்தி அறிமுகப்படுத்திய போது கட்சியின் எழுச்சி முழக்கங்கள் அரங்கை அதிரச் செய்தது.

நிறைவாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசினார்.

அவரது எழுச்சி உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

கோவை என்றாலே எனக்கு எப்போதும் உற்சாகம் வரும்.

ஏனெனில் இங்குள்ள நம் சகோதரர்கள் குழந்தைகளை போல அடம் பிடிப்பார்கள். ஆனால் தலைவர்களை போல சிந்திப்பார்கள்.

நினைத்ததை சாதித்து முடிப்பார்கள்.

அதனால்தான் இங்கு மீண்டும் ஒரு எழுச்சியான போராட்டத்தை அறிவித்திருக்கிறோம்.

இது நியாயத்திற்கான போராட்டம். உரிமைக்கான போராட்டம். கொள்கைக்கான போராட்டம்.

குரலற்ற மக்களுக்காக குரல் கொடுப்பதே நமது அரசியலாகும்.

சிறைவாசிகளின் மனித உரிமைகளுக்காக நாம் குரலெழுப்புகிறோம்.

ஒரு போராட்டம் வெற்றி பெறுமா? பெறாதா? என்ற நோக்கில் நாம் சிந்திப்பதில்லை. மாறாக அதில் நியாயம் இருக்கிறதா? இல்லையா? என்பதே நமது பார்வையாக இருக்கும்.

நியாயம் இருப்பின் கடைசி வரை சமரசம் இன்றி போராடுவோம்.

எந்த ஒரு போராட்டமும் சிறிய புள்ளியிலிருந்தே புறப்பட்டு பெரும் வெற்றியை பெறுகிறது.

க்யூபாவை பாடிஸ்டா என்ற சர்வாதிகாரி ஆண்ட போது, அவருக்கு எதிராக புரட்சி படை ஒன்று பிடல் காஸ்ட்ரோ தலைமையில் சேகுவேரா, உள்ளிட்டோருடன் புறப்படுகிறது.

கிராண்மா என்ற சிறிய கப்பலில் புறப்பட்ட அப்படையின் முன்னெடுப்புகள் தான் க்யூபாவை விடுதலை பெறச் செய்து புரட்சிகர அரசை அங்கு தோற்றுவித்தது.

லிபியாவில் சாமானியர்களை கொண்ட உமர் முக்தாரின், கிளர்ச்சிப் படைதான், இத்தாலிய பெரும்படையை திணறடித்தது.

அது போல, வட ஆப்பிரிக்கா கடலோரம் மொரொக்கோவிலிருந்து ஒரு படை ஸ்பெயினுக்கு, தாரிக் என்பவரின் தலைமையில் புறப்பட்டது.

அவர்கள் அங்கு தரையிறங்கியதும், முதலில் தாங்கள் வந்த கப்பலை தீயிலிட்டு கொளுத்தினார்கள்.

ஏன் தெரியுமா? ஸ்பெயினை வெல்லும் தங்கள் முயற்சியில் தோல்வி பயம் ஏற்பட்டு பின் வாங்கிடும் மனநிலை வந்து விடக் கூடாது என்ற மன உறுதியுடன் அதை செய்தார்கள்.

அந்த தியாகம்தான் ஸ்பெயினை 800 வருடங்கள் அவர்களை ஆள வைத்தது.

தியாகங்கள்தான் வெற்றிகளாகும். மாபெரும் வெற்றிகளுக்கு மாபெரும் தியாகங்கள் தேவை.

நாம் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தியாகப்பூர்வமாக ஜனநாயக வழியில் களமிறங்கியுள்ளோம்.

இதில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களின் நியாயங்களும் அடங்கும்.

தென் மாவட்டங்களில் சாதி கலவரங்களால் தண்டனை பெற்றுள்ள பல்வேறு சகோதர சமூகங்களை சேர்ந்தவர்களின் நியாயங்களும் அடங்கும்.

சங்பரிவார ஆதரவு பெற்ற காவி அமைப்புகளை சேர்ந்த 4 பேரின் நியாயங்களும் அதில் அடங்கும்.

அது போல 38 முஸ்லிம் சிறைவாசிகளின் நியாயங்களும் அடங்கும்.

நாங்கள் இந்த அரசுக்கு எதிராக போராடவில்லை. யாருக்கும் நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கமும் இல்லை.

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கவன ஈர்ப்பை ஏற்படுத்திட போராடுகிறோம்.

இப்போது இவர்கள் விடுதலை ஆகாவிட்டால், இனி எப்போதும் நடக்காது என்பதால் போராடுகிறோம்.

காந்தியை கொன்றவர்கள், ஆயுதமேந்தி போராடிய நக்ஸலைட்டுகள், தர்மபுரியில் பேருந்தை கொளுத்தி 3 மாணவிகளை கொன்றவர்கள், கம்யூனிஸ்ட் தோழி லீலாவதியை கொன்றவர்கள், கீழ்வெண்மணியில் 44 விவசாய கூலிகளை உயிரோடு எரித்தவர்கள் என பலரும் பொது மன்னிப்பின் கீழ் முன் விடுதலை ஆகியுள்ளனர். இது கடந்த கால வரலாறு.

நாம் விசாரணைக் கைதிகளையோ, தண்டணை அனுபவிக்காதவர்களையோ, தூக்கு தண்டனை பெற்றவர்களையோ விடுதலை செய்ய கோரவில்லை..

நீதிமன்றத்தால் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டு, 14 ஆண்டுகளையும் கடந்து, 22 ஆண்டுகளுக்கும் மேலாக கூடுதல் தண்டணையை அனுபவிப்பவர்களை தான், மனித உரிமை களை மதிக்கும் வகையில் முன் விடுதலை செய்யக் கோறுகிறோம்.

குற்றவியல் சட்டத்தின் நோக்கமே, தண்டனையின் மூலம் குற்றம் செய்தவர்களை திருத்தி, மீண்டும் சமூகத்துடன் இணைத்து அவர்களை வாழச் செய்வதேயாகும்.

அந்த வாய்ப்பை ; தண்டனையை முழுவதுமாக அனுபவித்த இவர்களுக்கு சாதி, மத, வழக்கு பேதமின்றி வழங்குங்கள் என்றே வாதிடுகிறோம்.

அந்த சிறைவாசிகளில் பலர் நோயாளிகளாகி விட்டார்கள். பலர் 60 வயதை கடந்து பலஹீனமாகி விட்டார்கள். இனி வெளியே அவர்கள் விடுதலையாகி வந்தால், எஞ்சிய காலத்தை குடும்பத்துடன் அமைதியாக கழிப்பார்கள்.

அவர்கள் பரோலில் வந்த காலகட்டங்களில் எந்த விதிகளையும் மீறியதில்லை. யாருக்கும் இடையூறு செய்ததில்லை. சட்டத்தை மதித்து கட்டுப்பாடுகளுடன் வந்து செல்கிறார்கள்.

எனவே இவர்களை கருணை கொண்டு பாருங்கள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 161 வது சட்டப் பிரிவை பயன்படுத்தி இவர்களுக்கு உதவ வேண்டும்.

இந்த அரசு உருவாக வேண்டும் என நினைத்து வாக்களித்தவர்கள் முக்கியமா?இந்த அரசு வரக்கூடாது என துடித்தவர்கள் முக்கியமா? என எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த தமிழக அரசுக்கு ஒரு ஆபத்து வருமானால் நாங்கள் ஜனநாயக ரீதியாக துணை நிற்போம்.

எனவே இவ்விஷயத்தில் துணிச்சலான முடிவை முதல்வர் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அம்மாவிடமும் இதே கோரிக்கையை நேரில் வலியுறுத்தினேன்.

பிறகு முதல்வர்களாக இருந்த மாண்புமிகு திரு, OPS அவர்களிடமும், மாண்புமிகு திரு.எடப்பாடியார் அவர்களிடமும் வலியுறுத்தினேன்.

சட்டசபையில் இக்கோரிக்கையை நான் வலியுறுத்தி பேசிய போதெல்லாம், இன்றைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் அன்று எதிர்கட்சி தலைவராக இருந்து உன்னிப்பாக கேட்டவர்.

எனது இக்கோரிக்கையை , எனது பெயரையும் குறிப்பிட்டு அன்றைய எதிர்கட்சி தலைவரும், இன்றைய முதல்வருமான மாண்புமிகு தளபதி அவர்கள் பேசியுள்ளது சட்ட சபை குறிப்பில் உள்ளது.

அதே கோரிக்கையை தான் இப்போதும் எழுப்புகிறோம்.

ஜனவரி 8 அன்று கோவையில் எங்கள் போராட்டம் அமைதி வழியில், ஜனநாயகப் பண்புகளோடு நடைபெறும். பல தரப்பட்ட மக்களும் வருவார்கள்.

போக்குவரத்துக்கு, கடைகளுக்கு தொந்தரவு இருக்காது. இது உறுதி.

எங்கள் போராட்ட களம் சூடு பிடித்துள்ளது.தமிழகமெங்கும் பரபரப்பை, எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நாங்கள் வீழ்ந்து விட்டோம் என்று சிலர் நினைத்தார்கள். நாங்கள் விழவில்லை. விதைகளாய் விழுந்திருக்கிறோம். செடிகளாய் எழுந்து பூப் பூப்போம். மரங்களாய் எழுந்து கனிகளை கொடுப்போம். நிழல்களை தருவோம்.

பதவிகள் என்பது எங்களது பயணங்களில் எதிர் படும் மேம்பாலங்கள் மட்டுமே.மேம்பாலங்கள் இல்லாவிடினும், வீதிகளின் நெரிசலை கடந்து எங்கள் பயணங்கள் தொடரும்.

நாங்கள் வேகத்தடைகளை தகர்த்து செல்லும் பீரங்கி படைகளாய் முன்னேறுவோம்.

அழுக்குகள் நிறைந்த அரசியல் உலகில், அழுக்குப் படாமல் பயணிப்பதே எங்களின் அரசியல் பயணமாகும்.

நாங்கள் கலைந்து செல்லும் மேகங்கள் அல்ல. கூடி மழை பொழியும் மேகங்கள்.

நாங்கள் லட்சியங்களோடு நகர்வோம்.

உன்னத நோக்கங்களோடு எமது பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசி முடிக்க அரங்கம் சூடாகி நிர்வாகிகள் எழுச்சி பொங்க உற்சாகம் அடைந்தனர்.

அதன் பிறகு ஜனவரி 8 அன்று தமிழகமெங்கிலிருந்தும் திரண்டு வரும் சொந்தங்களை வரவேற்கும் உற்சாகத்தோடும், மாநகர மக்களை படை திரட்டும் உத்வேகத்தோடும் அனைவரும் புறப்பட்டனர்,

இந்திகழ்வில், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், நிவாஸ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சுல்தான், பொருளாளர் சேக்மைதீன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், HM.ஹனீபா, கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் ஆரிப் அப்பாஸ், முபாரக், மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பகுதி, கிளை, நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisnors

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
17.12.2021