வரலாற்றை உயிர்ப்பித்து வெற்றி பெற்றுள்ளனர் விவசாயிகள்!

#மூன்று_வேளாண்_சட்டங்கள்_திரும்ப_பெறப்பட்டது_குறித்து!

#மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_அறிக்கை!

இந்திய விவசாயிகளின் நலன்களுக்கும், விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஓராண்டாக தொடர்ந்து விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது.

பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகளின் போராட்டங்களை அலட்சியம் செய்தார். அவரது அமைச்சர்களும், பாஜக வினரும் விவசாயிகளின் போராட்டங்களை சிறுமைப்படுத்தியதோடு மட்டுமின்றி, பல இடங்களில் எதிர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

ஆனால் விவசாயிகள் அயராமல்; அஞ்சாமல் களமாடி இந்திய அரசியலின் போக்குகளை திசை மாற்றும் அளவுக்கு போராட்டங்களை கூர்மைப்படுத்தினர்.

இதற்கு பஞ்சாப் மாநில விவசாயிகள் தலைமையேற்றதுதான் முக்கிய காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

அவர்களின் தியாகம் நாடு தழுவிய அளவில் பொதுமக்களை விவசாயிகளுக்கு ஆதரவாக மாற்றியது.

அதன் விளைவாக இன்று பிரதமர் மோடி அவர்கள் , மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.

இது விவசாயிகளின் தியாகப்பூர்வ போராட்டங்களுக்கு கிடைத்த இமாலய வெற்றியாகும்.

அடம் பிடித்த பிரதமரையும்,ஒன்றிய அரசையும் பணிய வைத்த விவசாயிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்காக தமிழகத்தில் விவசாயிகளோடு இணைந்தும், தனித்தும் அதிகமான போராட்டங்களை நடத்திய கட்சி என்ற அடிப்படையில் நாங்களும், விவசாயிகளோடு மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறோம்.

உயரிய லட்சியங்களோடு ; சமரசமின்றி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் வெற்றி பெறும் என்ற வரலாற்றை இந்திய விவசாயிகள் மீண்டும் உயிர்ப்பித்து வெற்றிக் கொடியை நட்டுள்ளனர்.

வாழ்க விவசாயிகள்!

இவண்

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி

19.11.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.