போதை பொருட்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாப்பதே அவசர தேவையாகும்! தஞ்சை நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!

கடந்த அக்டோபர் 7 அன்று தஞ்சாவூரில், பெண்கள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கீழவாசல் மஹ்தியா பெண்கள் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி Ex.MLA அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர். ராவுத்தர்ஷா. மாநில துணைச் செயலாளர் வல்லம். அகமது கபீர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்று திருக்குர்ஆன் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகளும் மற்றும் அனைத்து சமூக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பொதுச் செயலளார் வழங்கினார்.

இந்நிகழ்வை பெண்கள் உதவும் கரங்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அப்துல்லாஹ், தலைவர் N. நாஸ்னி பேகம், செயலாளர் ஹாஜிரா பீவி, பொருளாளர் ஜமீலா பேகம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசிய உரையின் சுருக்கம் பின்வருமாறு…

பெண்கள் சுதந்திரமாக தொழில் செய்யவும், கல்வி கற்கவும், சேவையாற்றவும் இஸ்லாமிய மார்க்கம் ஊக்குவிக்கிறது.

அவர்கள் ஆணாதிக்கத்தாலும், பாலியல் சீண்டல்களாலும் பாதிக்கப்படாமல் இப்பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.

இந்த வரையறையை நல்லெண்ணத்துடன் ; நடுநிலையாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

சிலர் இதை தவறாக புரிந்துக் கொள்வது வீணான பிரச்சனைகளை உருவாக்குகிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாரத்தில் ஒரு நாள் பெண் கல்விக்காக நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

இதற்கு சான்றாக, அவர்கள் குறித்து ஹதீஸ் எனும் வாழ்வியல் செய்திகளை பதிவு செய்த முதல் மூவரில் அன்னை. ஆயிஷா (ரலி) அவர்களும் ஒருவர்.

நபிகளாரின் விதவை மனைவியான அன்னை. கதீஜா ( ரலி) அவர்கள் சிறந்த வணிக ராக திகழ்ந்தார்.

நபிகளார் காலத்தில் போர்களத்தில் பெண்கள் செவிலியர்களாக பணி புரிந்துள்ளனர்.

இவற்றை எண்ணிப் பார்த்து பெண்கள் நலனை பாதுகாப்பான சூழலில் முன்னெடுக்க வேண்டும்.

தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தில் பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி கற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அது போல் தன்னெழுச்சியாக பொது சேவைகளில் ஈடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.

இங்கே இந்த பெண்கள் அமைப்பு கல்வி விழிப்புணர்வு பணிகளுடன், நன்கொடைகளையும் திரட்டி சாதி, மதம் பாராமல் பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது.

இப்பணிகள் தொடர எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

மேலும் இந்த நிகழ்வில் முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பெற்றோர்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கு ஒரு பெரும் கடமை ஒன்று கூடுதலாக உருவாகியுள்ளது.

அதாவது தடை செய்யப்பட்ட கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களின் தீமைகளிலிருந்து பிள்ளைகளை பாது காக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக 10 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் பிள்ளைகளை அதிகமாக உற்று கவனிக்க வேண்டும்.

வளரும் இளைய தலைமுறையை சீரழிக்க ஒரு சதிக் கூட்டம் உருவாகியுள்ளது.

எனவே பிள்ளைகளின் புத்தக பைகளையும், செல்போன்களையும் சோதிக்க வேண்டும்.

மோட்டார் பைக் வாங்கி கொடுப்பது முக்கியமல்ல. அதையும் சோதிக்க வேண்டும்.

எப்படி பெட்ரோலுக்கு செலவு செய்கிறார்கள் என்பதையும் விசாரிக்க வேண்டும்.

இது எல்லா சமூக மக்களுக்கும் நான் வைக்கும் வேண்டு கோளாகும்.

நமது அடுத்த தலைமுறையை , போதைக்கு அடிமையாகமல், ஆரோக்கியமான சமூகமாக உருவாக்க வேண்டிய தேவைகள் எழுந்துள்ளது.

எனவே பொது சேவையில் இதை முக்கிய சேவையாக கருத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, இந்த பெண்கள் அமைப்பின் சேவைகள் தொடர பிரார்த்திக்கிறேன். பணிகள் சிறக்க வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட பொருளாளர் உமர் அப்துல்லா, தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநகர செயலாளர் காமில், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை (IKP) மாவட்ட செயலாளர் ஜாஹீர், வீர சோழன் மொய்தீன் உள்ளிட்டோரும் உடன் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
09.10.2021