மத நல்லிணக்கம் காத்த பெருந்தகை மதுரை ஆதினம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்!

மதுரை ஆதினம் என்று அன்போடு அழைக்கப்பட்ட அருணகிரிநாதர் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையடைகிறோம்.

சிறந்த ஆன்மீக வாதியாக திகழ்ந்த அவர், அரசியல் அரங்கிலும் கவனம் பெற்றவராய் வலம் வந்தார்.

அவரது தமிழ் மொழி மீதான பற்றும், தமிழினத்தின் மீதான அக்கறையும் அவரை ஆன்மீகத்தையும் கடந்து அனைவரையும் நேசிக்க வைத்தது.

அவரது தமிழும், ஆங்கிலமும் கலகலப்பான மொழி நடையாக அனைவரையும் வசீகரிக்கும்.

மத நல்லிணக்கத்தை வளர்ப்பதிலும், பிற மதத்தினரை கொண்டாடுவதிலும் சமகாலத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், ஷஹீத் பழனிபாபா, நாகூர் அனிபா, ஆகியோரோடு அவர் கடைப்பிடித்த தோழமை கற்கண்டுக்கு இணையானது.

தங்கள் ஆதினத்திற்கு முகலாய மன்னர் ஒளரங்கசீப், நிலங்களை தானமாக தந்ததை பெருமையோடு பரப்புரை செய்து, மத நல்லிணக்கம் வளர அரும்பாடுபட்டவர்.

இந்து மதத்தின் சிறப்புகளை சிலாகிக்கும் அவர், திருக்குர் ஆனின் முதல் அத்தியாயமான அல்- பாத்திஹா வை மனனம் செய்து, பல மீலாது மேடைகளில் மகிழ்ச்சிப் பொங்க எடுத்துக் கூறுவார்.

அவர் மத நல்லிணக்கம் காத்த பெருந்தகையாளர்.

அன்னாரைப் போன்ற ஆன்மீக தலைவர்கள் தீவிரமாக இயங்க வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் அவரை நாம் இழந்திருக்கிறோம்.

அவரை இழந்து வாடும் பக்தர்கள், ஆதின மடத்தினர், அபிமானிகள் என அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது.

அன்னாரின் தமிழ் பணிகளையும், சமய நல்லிணக்க சிந்தனைகளையும் வளர்த்தெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி

13.08.2021