தமிழகத்தில் புதிய ரயில் பாதைகளை உருவாக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்..

திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பொதக்குடிக்கு வருகை தந்தார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மன்னை.செல்லச்சாமி, மாநில செயலாளர் நாச்சிகுளம் . தாஜூதீன் ஆகியோரும் வருகை தந்தனர்.

அப்போது அருகில் உள்ள ஆய்குடி கிராமத்தில் அவ்வூர் மக்கள் தாங்கள் கட்டி வரும் காளியம்மன் கோயிலை பார்வையிட வருமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, பொதுச் செயலாளர் அங்கு வருகை புரிந்தார். அவரை அப்பகுதி மக்கள் வரவேற்று மஜகவினர் அப்பகுதிகளில் ஆற்றி வரும் சேவைப் பணிகளை சிலாகித்து கூறினர்.

பிறகு பொதக்குடி மஸ்ஜிதில் ஜமாத்தினர் சார்பில் நடைப்பெற்ற வரவேற்புடன் கூடிய கலந்துரையாடலிலும் பங்கேற்றார்.

பிறகு காலம் சென்ற முன்னாள் மஜக நிர்வாகி கமால்தீன் அவர்களின் மகள் நஃபிலா நஸ்ரினின் திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களுக்கு, அவரும், தலைமை நிர்வாகிகளும் வாழ்த்து கூறினர்.

பிறகு பொதக்குடி மஜக அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.

அதில் பொதுச் செயலாளர் கூறியதாவது…

காரைக்குடி – திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் நிறைவுற்ற நிலையில், அங்குள்ள தேவைகளை பூர்த்தி செய்து விரைந்து ரயில் போக்குவரத்தை ஒன்றிய அரசு தொடங்க வேண்டும்.

அது போல் வேதாரண்யம் – திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து பூர்த்தி செய்து, ரயில் போக்குவரத்தை அதில் தொடங்க வேண்டும்.

இதனால் உப்பு ஏற்றுமதி, நெல் உள்ளிட்ட விவசாய உற்பத்திகள் ஏற்றுமதி ஆகியன வணிக ரீதியான லாபங்களை பெறவும், பயணிகளின் வசதிகள் அதிகரிக்கவும் வழி ஏற்படும்.

மேலும் வேதாரண்யம் – வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் பாதையை அமைக்கவும் ஒன்றிய அரசு வழி செய்ய வேண்டும்.

இது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளால் போர் நெருக்கடிகள் ஏற்படும் போது ராணுவ பயன்பாட்டுக்கும் அது பெரிதும் உதவும்.

இந்திய ரயில்வேக்கு தமிழகம் பெருமளவில் லாபத்தை கொடுக்கும் நிலையில், தமிழகத்திற்கு புதிய ரயில் போக்குவரத்து தடங்களை உருவாக்க ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அங்கு கர்நாடக அரசு அணைக்கட்ட முயற்சிப்பது சட்ட விரோதமானது என்றும், அதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்றும் கூறினார்.

நீட் தேர்வு குறித்து கூறியவர், நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய தமிழக முதல்வர் எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டினார். இந்தியா முழுக்க நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது மஜகவின் நிலைப்பாடு என்றவர், அது கிராமப்புற மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதால் அதை உறுதியாக எதிர்ப்போம் என்றார்.

பிறகு பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் கிளைகளை சேர்ந்த மஜக வினரை சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பிறகு கூத்தாநல்லூர் வருகை தந்த அவர், மஜக செயல்வீரர் சலீம் இல்லத்திற்கு வருகை தந்து, சமீபத்தில் அவருக்கு நடைபெற்ற திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறினார்

இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜம்ஜம் சாகுல், பொதக்குடி ஜெய்னுதீன், மாவட்ட துணை செயலாளர் நத்தர் கனி, நிர்வாகிகள் ஷேக் சிராஜ்தீன், குத்புதீன், பொதக்குடி முனவர்தீன், ஜலால், ஜாகீர், அபி, அத்திக்கடை சலீம், காதர், ரியாஸ், கூத்தாநல்லூர் நூருல் அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.