டாஸ்மார்க்கடைகளை திறப்பதா? 41 நாள்கடைப் பிடித்த ஊரடங்கு வீணாகிறதா? : முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை

கடந்த 41 நாட்களாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

ஆனால் முக்கியமாக பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் கடை வீதிகளில் அலைவதை பார்க்கும் போது இத்தனை நாள் பின்பற்றிய ஊரடங்கின் பயன் வீணாகி கொரோனா நோய் தொற்று அதிகரித்து விடுமோ என்ற சமூக கவலை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

எந்தெந்த கடைகளை திறப்பது என்பதிலும், நேர வரையரையிலும் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் மே-7 முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் வேதனையளிக்கிறது.

மதுப்பழக்கம் உள்ளவர்களில் அறுதிப் பெரும்பான்மையினர் மனமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அரசு இவ்வாறு அறிவித்திருப்பது பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

வழிபாட்டு தலங்களை திறக்கக் கூடாது என்றும், முடிவெட்டும் சலூன் கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறி விட்டு, சாராயக் கடைகளை திறக்க அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க எவ்வாறு வலியுறுத்த முடியும்? அது சாத்தியமா?

இவையாவும் நிலைமையை மோசமடைய செய்து, முழு தமிழகத்தையும் சிவப்பு மண்டலமாக மாற்றவே துணை போகும்.

எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்ற முடிவை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA.,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
05.05.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.