பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு எதிரானது : முதமிமுன்அன்சாரி MLA கண்டனம்

கொரோனா காரணமாக நாடும், மக்களும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது, பன்னாட்டு சந்தையின் விலைக்கேற்ப பெட்ரோல் – டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுகின்றன.

இந்நிலையில், மத்திய – மாநில அரசுகள் இவற்றின் விலையை அதிகரிக்க செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு நேற்று முதல், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 25 காசும், டீசல் ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசும் என மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தி அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே கடந்த மாதம் மத்திய அரசு, இவ்விரண்டிற்குமான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இம்மாத நிலவரப்படி, பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 26 டாலர் என சரிவை சந்தித்திருக்கிறது.

எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஒபெக் ‘ நாடுகள், கச்சா எண்ணெய் விற்பனை ஆனால் போதும் என்ற நிலையில் உள்ளன.

இச்சூழலில் அவற்றின் பலன் நம் மக்களுக்கு போய் சேராதபடி மத்திய – மாநில அரசுகள் விலை ஏற்றங்களுக்கு வழிகோலுவது சரியல்ல.

இதன் மூலம் எண்ணெய் இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் முதலாளிகள் மேலும், மேலும் லாபமடைய உதவுகிறார்கள்.

மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியாக மட்டும் 20 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிறகும் நமது அரசுகள் மக்களை சுரண்டுவதை எப்படி ஏற்க முடியும்?

தற்போது தமிழக அரசு பெட்ரோலுக்கு மதிப்புக் கூட்டு வரியை 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசலுக்கு 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தியிருக்கிருப்பது விலைவாசி உயர்வுக்குத்தான் வித்திடும்.

நம்மைப் போலவே கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் பல ஆசிய நாடுகள் பெட்ரோல், டீசலை குறைந்த விலைக்கு விற்கின்றன எனும் போது, நமது நாட்டில் தொடர்ந்து விலையேற்றம் செய்வது என்பது மக்கள் விரோதப் போக்காகும்.

எனவே, தமிழக அரசு மதிப்புக் கூட்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்றும், பன்னாட்டு கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, மத்திய அரசு நம் நாட்டில் பெட்ரோல், டீசலை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,

மனிதநேய ஜனநாயக கட்சி

04.05.2020