மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் “வீடியோ கான்ஃபிரன்ஸ்” வழியாக இன்று (23-04-2020) நடைபெற்றது.
பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப தொடர்புகள் கிடைக்கப்பெற்ற தலைமை நிர்வாகிகள் பங்குபெற்றனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாய் ரஷாதி, துணை பொதுச் செயலாளர்கள் செய்யது முஹம்மது பாருக், மண்டலம் ஜெயினுலாபுதீன், கோவை சுல்தான் அமீர், N.A.தைமிய்யா, மாநிலச் செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், ராசிதீன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
ஒன்னரை (1/12) மணி நேரம் நடைபெற்ற கலந்தாய்வில் நடப்பு நிலவரங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டது.
நிறைவாக கீழ்கண்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு…
# நன்றி
1) கடந்த பிப்ரவரி 29 அன்று தமிழகம் தழுவிய அளவில் கோவையில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்று, அதை சிறப்பித்த அனைவருக்கும் இக்கூட்டம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
https://m.facebook.com/story.php?story_fbid=2414355501997544&id=700424783390633
#வெற்றி_பெறுவோம்
2) உலகம் உருவாகிய பிறகு, உலகமே ஊரடங்கில் தவிக்கும் முதல் வரலாற்று சோகத்தை நாம் அனைவரும் சந்திக்கிறோம்.
வாழ்விற்கும் – மரணத்திற்குமான இப்போராட்டத்தில் அனைவரும் இணைந்து நின்று உறுதியுடன் போராடி, இறைவனின் அருளால் வெற்றி பெறுவோம் என இக்கூட்டம் உறுதியேற்கிறது.
#இரங்கல்
3) உலகம் முழுக்க கொரோனாவால் உயிர் துறந்த அனைவருக்கும் தலைமை நிர்வாகக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவரும் பூரண நலம் பெறவும் பிரார்த்திக்கிறது.
#தியாகத்திற்கு_மரியாதை
4) கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து அதன் காரணமாக உயிர்துறந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் அவர்களின் தியாகத்தைப் போற்றி, அவர் பெயரால் தமிழக அரசு மருத்துவ சேவைக்கான விருதை வழங்க வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
#ஊரடங்கு
5) கொரோனாவை ஒழிக்கும் நோக்கில் அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு உத்தரவையும், வழிகாட்டல்களையும் அனைவரும் மதிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
#ஐயாயிரம்_நிவாரணம்
6) கடந்த ஒரு மாதமாக வருவாய் இழந்திருக்கும் நாட்டின் பலதரப்பட்ட மக்களின் நலன் கருதி மத்திய அரசு, ஒரு குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரூபாயை முதல்கட்ட நிவாரணமாக வழங்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
#மஜகவினருக்கு_பாராட்டு
7) கடந்த ஒரு மாத காலமாக தமிழகமெங்கும் நிவாரண உதவிகளை வழங்கி களப் பணியாற்றி வரும் மஜகவினர் அனைவரின் உழைப்பையும் இக்கூட்டம் பாராட்டுகிறது.
#கூட்டுக்குழு
8) தமிழக அரசு நிவாரண பணிகளை சிறப்பாக செய்யும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான கூட்டு குழுக்களை அமைக்க வேண்டும் எனவும், இதில் சமூக இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமூக சேவகர்கள், தொழிலதிபர்கள், கார்பரேட் கம்பெனிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை இடம்பெற செய்ய வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
#அரிசி_விநியோகம்
9) புனித ரமலான் நோன்பை யொட்டி, தமிழக அரசு வழங்கும் இலவச அரிசியை, தேவை கருதி விண்ணப்பிக்கும் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் வழங்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
#வெளிநாடுகளில்வசிப்போர்நலன்
10) கொரோனா சூழலில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை தாயகத்திற்கு மீட்டுவர தமிழக அரசு உரிய முன்னேற்பாடுகளை மத்திய அரசின் வாயிலாக எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
அதுவரை இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
#வெளிமாநிலத்தில்வசிப்போர்நலன்
11) பல்வேறு காரணங்களுக்காக வெளிமாநிலங்களுக்கு சென்று தற்போது கொரோனா காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களுக்கு, ஆங்காங்கே உரிய தங்கும் இடங்கள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
மேலும் அவர்கள் உரிய சூழலில் விரைந்து ஊர் திரும்பவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
#சேவைகளுக்கு_பாராட்டு
12) கொரோனா நிவாரணப் பணிகளில் அர்ப்பணிப்போடு செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
#ஆறுதல்உதவிநிதி
13) கொரோனா பழியை சுமத்திய காரணங்களால் வேதனைப்பட்டு பலர் தற்கொலை செய்திருக்கிறார்கள். பலர் பசி, வறுமை காரணமாக தற்கொலை செய்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் நிதியாக தலா 20 லட்சம் ரூபாயும், குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
மேலும் நெருக்கடிகள் கொடுத்து தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கொலை வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
#சிறைவாசிகள்
14) தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் கொரோனா காலத்தில் அவரவர் வழிபாட்டு உரிமைகள், நம்பிக்கைகள் மதிக்கப்படும் வகையில் தமிழக சிறைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரமலான் காலத்தில் நோன்பிருக்கும் கைதிகளின் சட்டப்பூர்வ தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
#ஒன்றுபடுவோம்
15) கொரோனா நோயை முன்வைத்து சில தீயசக்திகள் மத வெறுப்பு அரசியலை முன்னெடுத்துள்ளதை இக்கூட்டம் கண்டிக்கிறது.
சமூக இணைய தளங்களில் அத்தகைய வெறுப்புகளை பரப்பியவர்கள் அனைவரும் பாராபட்சமின்றி கைது செய்யப்பட வேண்டும் என்றும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
பேரிடர் என்பது அனைத்திற்கும் அப்பாற்பட்டது. இவ்விவகாரத்தில் மனித நேயத்திற்கு எதிராக யாரும் செயல்பட வேண்டாம் என்றும், அனைவரும் சகோதர, சகோதரிகளாக ஒன்றுபட்டு இத்தருணத்தில் செயலாற்ற வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட 15 தீர்மானங்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக்குழு நிறைவுப் பெற்றது.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
23-04-2020