மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAவேண்டுகோள்!
கொரணா நிவாரண பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரணாவின் தாக்கம் என்பது ஜூன் மாதம் வரை நீடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
தமிழகத்தில் ஊரடங்கு என்பது இன்றோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது.
இது எப்போது முடியும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை.
இந்நிலையில் அரசு மட்டுமே இப்பிரச்சனையை முழுமையாக சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.
தற்போது அரசு ஊழியர்களின் மகத்தான சேவைகள் போற்றுதலுக்குரியது.
அது போல் தன்னார்வலர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு ஆங்காங்கே சேவை செய்கிறார்கள். எனினும் அது ஒழுங்குப் படுத்தப்படாத காரணத்தால் அந்த சேவைகள் கிடைக்கப்பெறாத இடங்களும் அதிகம் உண்டு.
எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அமைப்புகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கொண்ட ஒரு குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட வேண்டும்.
இந்த பேரிடர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திட்டமிடலை உருவாக்கி வெற்றிகரமாக பல்வேறு பணிகளை செய்ய முடியும்.
இதைப் போலவே மாநில அளவில் சமூக அமைப்புகள், கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களை கொண்டு மாநில குழு ஒன்றும் ஒரு IAS அதிகாரியின் தலைமையில் உருவாக்கப்பட வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு குழுக்கள் என்பது நிவாரணப் பொருட்களை சரியான நேரத்தில், சரியான நபர்களுக்கு கொண்டு செல்வதற்கும், நிவாரணப் பொருட்களை பல்வேறு நபர்களிடம் பெறுவதற்கும், பிரித்து கொடுப்பதற்கும், மக்களின் கருத்துகளை அரசு தரப்புக்கு கொண்டு செல்வதற்கும், விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்கும் உதவும். இக்குழு மூலம் பல்வேறு பணிகளை முன்னின்று செய்ய முடியும்.
இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் உரிய அங்கீகாரத்தை கொடுப்பதோடு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கவசம், போக்குவரத்து உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்பாடு செய்தால், நிவாரணப் பணிகள் புத்துணர்ச்சி பெறும்.
எனவே, தமிழ்நாடு அரசு கொரணா பேரிடர் ஒருங்கிணைப்புக் குழுக்களை உடனடியாக உருவாக்கிடுவது அவசியம் என்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
22.04.2020