மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாத நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் வழக்கம் போல் செயல்பட்டு கட்டண வசூல் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கண்டனத்திற்குரியதாகும்.
கொரணா நோய் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பும், பீதியும் குறையாத நிலையில் மக்கள் மிகப் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளார்கள்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடிகள் செயல்படும் என அறிவித்திருப்பது மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.
https://m.facebook.com/story.php?story_fbid=2406932309406530&id=700424783390633
இதன் மூலம் அவசரப் பயணம் மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவது ஒரு புறமெனில், சரக்குப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டு அதன் விளைவாக விலைவாசி ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விடும்.
அந்த வகையில் இது மக்களின் மீது நடத்தப்படும் பொருளாதார தாக்குதலாகும்.
மத்திய அரசு இதுவரை மக்களுக்கு நேரடியாக எந்த உதவியும் செய்யாத நிலையில், அவர்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவே பெரிய உதவியாகும்.
இந்தியா முழுதும் உள்ள சுங்கச்சாவடிகள் தனியார் நிறுவனங்களால் ஏலம் எடுக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது.
இப்போதைய நிலையில் அவற்றை செயல்பட வைப்பது மக்களிடையே மேலும் கடும் அதிருப்தியைத் தான் உருவாக்கும்.
எனவே, மத்திய அரசு இம்முடிவை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA.,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
20.04.2020