மாணவர்கள் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

( மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு )

மீண்டும் தமிழ்நாடு இளம் தமிழ் போராளிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பங்கேற்ற மாணவர்-இளைஞர் சமூகம், பின்னர் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்தையும் வழி நடத்தியது.

சந்தைப் பொருளாதார யுகம், தகவல் தொழில்நுட்ப மோகம் என உலகம் மாறிய தருணத்தில் 1990 முதல் 2010 வரை இருபது ஆண்டுகள் மாணவர் போராட்டங்கள் காணாமல் போயின.

2010ல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மாணவர் சமூகம் சோம்பல் முறித்து களமிறங்கியது. லயோலா கல்லூரி மற்றும் புதுக்கல்லூரி மாணவர்கள் மூட்டிய நெருப்பு தமிழ்நாட்டை அனலாக்கியது.

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் சமூக இணைய தளங்களின் வழியாக தன்னெழுச்சியாக மாணவர்கள்-இளைஞர்கள் அணிதிரண்டு அனைவரையும் அதிர வைத்தனர். அது மதுரை, நெல்லை, கோவை என தொடங்கி எங்கும் பற்றியிருக்கிறது.

இது வரவேற்கத்தக்க புரட்சிகர போக்காகும். பொது விவகாரங்களில் மாணவர்களும், இளைஞர்களும் களமிறங்கினால் நேர்மையான அரசியலும், நாகரிகமான பொதுவாழ்வும் வலுப்பெறும். நேர்மையான தலைவர்கள் வலிமைப்பெறவும், புதிய தலைவர்கள் உருவாகவும் வழிப்பிறக்கும்.

எனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் களமிறங்குவதை வரவேற்று வாழ்த்துகிறோம். தமிழகம் புதிய திசையை நோக்கி பயணிக்கட்டும்.

இவண்,
M.தமிமுன் அன்சாரி MLA
12/01/2017