உள்நாட்டு அமைதியின் மூலமே வல்லரசு கனவு சாத்தியமாகும்! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!

சென்னை மேடவாக்கத்தில் அமைந்திருக்கும் காயிதே மில்லத் கல்லூரியில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

காயிதே மில்லத் அவர்களின் பேரனும், கல்லூரியின் தாளாளருமான தாவூத் மியாகான் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சாரணர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு :-

https://m.facebook.com/story.php?story_fbid=2240614932704936&id=700424783390633

இன்று இந்தியாவின் 71 வது குடியரசு தின விழாவை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறோம். ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே நமது நாட்டின் சிறப்பாகும். பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், பண்பாடுகள் இவற்றின் கதம்பமாக நம்நாடு இருக்கிறது. வேறுபட்ட நிலவியல் அமைப்புகளையும் கொண்ட நாடு இதுதான். அதனால் தான் இந்தியாவை துணைக் கண்டம் என்றும் நாடுகளின் ஒன்றியம் என்றும் கூறி சிறப்பிக்கிறார்கள்.

இதை சிதைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளை, சமூகங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறார்கள்.

கல்வியை சாமான்யர்களுக்கு கடினமாக்கி அவர்களின் முன்னேற்றத்தை தடுத்து ஒரு கட்டத்தில் இடஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்ய துடிக்கிறார்கள்.

சமூகநீதியை, மதச்சார்பின்மையை மக்கள் உரிமைகளை அழிக்க துடிக்கிறார்கள்.

எல்லாவற்றையும் ஒற்றை கலாச்சாரமாக்க துடிப்பது இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிரானது என்பதை அவர்கள் உணரவில்லை.

சுவாமி விவேகானந்தர் அவர்கள் இதுப்பற்றி அன்றே சிந்தித்து எச்சரித்துள்ளார்.

அவர் சொன்னார். ”வேற்றுமைகள், முற்றிலும் முரணான வேற்றுமைகள் நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால், அதற்காக நாம் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டியதில்லை. ஒருவரோடு ஒருவர் போரிட வேண்டும் என்பதில்லை. எலோருக்கும் ஒரே வழி என்ற கொள்கை அழிவை தரும். அது பொருளற்றது. முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது” என்று சுவாமி விவேகானந்தர் தெளிவாக கூறி எச்சரித்துள்ளார்.

இவ்வாறு பன்மை கலாச்சாரத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்த சுவாமி விவேகானந்தர் அவர்கள் “உலகிலேயே கொடியது சிறுபான்மையினர் மீதான அடக்குமுறையே” என்றும் வேதனைப்பட்டார்.

சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளை நமது பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்று நாட்டின் பன்மை கலாச்சாரத்திற்கு பேராபத்து வந்துள்ள நிலையில், மக்கள் அச்சமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

குடியுரிமைக்காக, வாழ்வுரிமைக்காக போராடும் அவல நிலை நாட்டில் நிலவுகிறது. பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் கருத்துக்கூற அஞ்சும் நிலை நிலவுகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என அப்துல்கலாம் கனவு கண்டார்.

“ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை, பலமுறை வந்தால் அது லட்சியம்” என்றார்.

“உறங்கும்போது வருவதல்ல கனவு, உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு” என்றார்.

அவர் 2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்று கனவு கண்டார்.

வல்லரசு எனில் ஏவுகணைகளை ஏவுவது மட்டுமல்ல, வளர்ந்த வல்லரசு நாடுகளுக்கு இணையாக ஆயுதங்களை தயாரித்து அனிவகுக்க செய்வது மட்டுமல்ல.

நமது நாட்டில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டால் அதை மீட்கக்கூட கருவி இல்லை. ஒழுங்கான திட்டமிடல் இல்லை.

மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க கூட முடியவில்லை. கிராமங்கள் நிலை மோசமாக உள்ளது. இதுதான் இன்றைய எதார்த்தம்.

அப்துல்கலாம் தனது வல்லரசு இந்தியா என்பது என்ன? என்று தெளிவாக விளக்குகிறார்.

அவர் கூறுகிறார். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்காது. இந்தியாவின் கலை, இலக்கியம், மனிதநேயம், மாண்புமிகு சிந்தனைகள் போன்றவற்றையும் குறிக்கும் என்றார். இதுதான் கலாம் கண்ட கனவு இந்தியாவாகும்.

வல்லரசாக வேண்டுமெனில் உள்நாட்டில் அமைதி தேவை. சமூக நல்லிணக்கம், சமூக நீதி இவையாவும் மதிக்கப்பட வேண்டும். அமைதியான தாயாகத்தை உருவாக்குவதன் மூலமே வல்லரசு கனவை எட்ட முடியும்.

அதிகாரத்தில் இருந்துக் கொண்டு அமைதியை குலைக்கக் கூடாது. அது நம்முன்னேற்றத்தை சிதைத்துவிடும்.

காந்தியடிகளின் கருத்தை இத்தருணத்தில் நினைவூட்ட வேண்டும். இப்போது அவரேயே வெறுக்கிறார்கள். கோட்சேவே புகழ்கிறார்கள். ஆனாலும், மக்கள் காந்தியை தான் நேசிக்கிறார்கள். காரணம் அவரது கொள்கைகள் தான்.

அவர் 7 பாவங்கள் பற்றி கூறுகிறார். அது வாழ்வின் அறம் சார்ந்த கொள்கைகள் பற்றியது.

உழைப்பு இல்லாத செல்வம், மனசாட்சியற்ற இன்பம், ஒழுக்கம் இல்லாத கல்வி, நேர்மை இல்லாத வணிகம், மனிதாபிமானம் இல்லாத அறிவியல் வளர்ச்சி, தியாகம் இல்லாத பிரார்த்தனை, கொள்கை இல்லாத அரசியல் என 7 பாவங்கள் பற்றி காந்தி சுட்டிக் காட்டுகிறார்.

காந்தியின் இக்கருத்தை நாட்டு மக்கள் உணர வேண்டும். இதுவே இந்திய குடியரசு தின செய்தியாகும்.

இந்த கல்லூரியில் பல சிறப்புகள் இருக்கலாம். அதில் பெரும் சிறப்பு காயிதே மில்லத் பெயரால் இது அமைந்திருப்பது தான்!

இந்திய அரசியலில் தேர்தலின் போது தொகுதிக்கே செல்லாமல் இரண்டு பேர் நாடாளுமன்றத்திற்கு வெற்றி பெற்று சென்றார்கள். ஒருவர் காயிதே மில்லத், இன்னொருவர் பசும்பொன் தேவர். காயிதே மில்லத் 3 முறை சென்றார். அதுவும் கேரள மாநிலத்திலிருந்து தேர்வாகி சென்றார்.

இந்தியாவில் தேசியமொழியாக எது இருக்க வேண்டும்? என நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது தமிழுக்கே அந்த சிறப்பு உண்டு என கம்பீரமாக முழங்கினார்.

அதைக்கேட்டு தமிழ்நாடு பூரித்தது. பெரியார் அதை கொண்டாடி மகிழ்ந்தார்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா ஆகிய நான்கு முதல்வர்களால் போற்றப்பட்ட தலைவர் அவர். அவர் இறந்தபோது, இறுதி ஊர்வலத்தில் புதுக்கல்லூரி முதல் வாலாஜா பள்ளி வரை செருப்பை கழற்றி விட்டு, நடந்தே வந்து தனது துக்கத்தை எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தினார். அவர் தான் காயிதே மில்லத்தின் படத்தை சட்டமன்றத்திலும் திறந்து வைத்தார்.

அவர் பெயரால் உள்ள இந்த கல்லூரி பற்றி 2000 ஆம் ஆண்டு உணர்வு பத்திரிக்கையில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அப்போது அப்துல் லத்தீப் சாஹிப் அவர்கள் அதன் தலைவராக இருந்தார்.

“தான் சவூதியில் இருந்த போது, இந்த கட்டுரையை படித்துவிட்டு தாயகம் திரும்பியதும் இக்கல்லூரியை ஏற்று வழி நடத்த வேண்டும் என தான் எண்ணியதாக” அண்ணன் தாவூத் மியாகான் ஒருமுறை என்னிடம் கூறினார்.

இன்று இக்கல்லூரி சிறப்பாக இயங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக அவருக்கும், அறக்கட்டளை நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை இங்கு அழைத்து தேசிய கொடி ஏற்ற வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்க செய்து சிறப்பித்தமைக்கு எனது நன்றியையும் கூறி, அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்து செய்தியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி…!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கல்பட்டு_மாவட்டம்.